முன்னாள் சிங்கப்பூர் ஆயுதப்படையின் (எஸ்ஏஎஃப்) முன்னாள் கேப்டன் ஒருவர் மீது 16 பேரை ஏமாற்றி 145,250 வெள்ளி பறித்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
அந்தத் தொகை, முதலீடுகள் அல்லது தனது தாயின் மருத்துவச் செலவுக்குப் பயன்படுத்தப்படும் என்று கூறி பெஞ்சமின் சோங் யோங் பாங், 37, என்ற அந்நபர் ஏமாற்றியதாக நம்பப்படுகிறது.
2021ஆம் ஆண்டு மே மாதத்துக்கும் 2024ஆம் ஆண்டு மார்ச் மாதத்துக்கும் இடைப்பட்ட காலத்தில் சோங் குற்றங்களைப் புரிந்ததாக நம்பப்படுவதாகக் குற்றப் பத்திரிகைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஏமாற்றிப் பணம் பறித்ததாகக் கூறப்படும் தொகையை சோங் தனது கடன்களை அடைக்கவும் மற்ற செலவுகளுக்காகவும் பயன்படுத்தினார் என்று லஞ்ச ஊழல் புலனாய்வுப் பிரிவு தெரிவித்தது.
வயதான தம்பதியுடன் நீதிமன்றத்தில் முன்னிலையான சோங், இவ்வழக்கில் சட்ட ரீதியான ஆலோசனை பெறப்போவதாக தெரிவித்தார். தற்போது அவருக்கு 100,000 வெள்ளிக்குப் பிணை வழங்கப்பட்டுள்ளது. வரும் டிசம்பர் மாதம் எட்டாம் தேதி இவ்வழக்கு மறுபடியும் நீதிமன்ற விசாரணைக்கு வரும்.
சோங் மீது 18 குற்றச்சாட்டுகள் திங்கட்கிழமை (நவம்பர் 10) சுமத்தப்பட்டன. அவற்றில் சிலவற்றுக்கு அவருக்கு 10 ஆண்டுகள் வரையிலான சிறைத் தண்டனையும் அபராதமும் விதிக்கப்படலாம்.

