காற்றின் தரத்தைக் குறிக்கும் அளவீடுகள் மிக அதிகமாக இருப்பது, புகைமூட்டக் காலங்களில் பொதுமக்களுக்கு அரசாங்கம் வழங்கும் தகவல்களைச் சிக்கலாக்கக்கூடும் என்று நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற அமைச்சர் கிரேஸ் ஃபூ, செவ்வாய்க்கிழமை (நவம்பர் 3) தெரிவித்தார்.
அடுத்த 24 மணிநேரத்திற்கான ‘மாசுபொருள் தரக் குறியீட்டை’ (பிஎஸ்ஐ) திட்டமிடலுக்கும், ஒவ்வொரு மணிநேரத்திற்குமான பிஎம்2.5 அளவீடுகளை உனடி முடிவெடுப்பதற்கும் பயன்படுத்துவது சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது என்று அவர் நாடாளுமன்றத்தில் கூறினார்.
“12 மணிநேரம், 24 மணிநேரம் அல்லது 48 மணிநேர பிஎம்2.5 முன்னறிவிப்புகளைச் சேர்க்க வேண்டிய அவசியம் இல்லை என்று அரசு நினைக்கிறது. ஏனெனில், அதிகமான முன்னறிவிப்புகள் நமது பொதுத் தகவல்களைச் சிக்கலாக்கும்,” என்று அவர் மேலும் கூறினார்.
பாட்டாளிக் கட்சியின் ஃபட்லி ஃபவ்ஸியின் (அல்ஜுனிட் குழுத் தொகுதி) கேள்விக்கு அவர் பதிலளித்தார். தனது அமைச்சின்கீழ் உள்ள தேசிய சுற்றுப்புற அமைப்பு (என்இஏ) சிங்கப்பூரர்கள் தங்கள் அன்றாட நடவடிக்கைகளைத் திட்டமிட உதவும் வகையில் பிஎம்2.5 முன்னறிவிப்புகளை வழங்க முடியுமா என்று ஃபட்லி கேட்டிருந்தார்.
“எங்கள் முன்னறிவிப்புகளும் ஆலோசனைகளும் தெளிவானவை, சுருக்கமானவை. அவை மக்கள் எளிதாகத் தங்கள் செயல்பாடுகளைத் திட்டமிட உதவுகின்றன,” என்று அமைச்சர் கூறினார்.
தேசிய சுற்றுப்புற அமைப்பு, தனது முன்னறிவிப்புகளையும் பொதுத் தகவல் சேவைகளையும் எவ்வாறு மேம்படுத்தி, இன்னும் பயனுள்ள வழிகாட்டுதல்களை வழங்க முடியும் என்பது குறித்துத் தொடர்ந்து மறுஆய்வு செய்யும் என்று அமைச்சர் தெரிவித்தார். மேலும், சரியான நேரத்தில் நம்பகமான தகவல்களை வழங்குவது, தனது அமைச்சின் பொதுச் சுகாதார நடவடிக்கைகளில் ஒரு முக்கிய அம்சம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
தேசிய சுற்றுப்புற அமைப்பு, இரு வாரங்களுக்கு ஒருமுறை முன்னறிவிப்புகளை வெளியிடுகிறது என்று குறிப்பிட்ட கிரேஸ் ஃபூ, அதே சமயம் முன்னறிவிப்புக் காலம் நீட்டிக்கப்படும்போது அதன் துல்லியம் குறைகிறது என்பதையும் சுட்டிக்காட்டினார்.
