வாலபி விபத்து: காயமுற்ற தேசிய சேவையாளர்கள் மீண்டும் படைகளில் சேர்ந்தனர்

வாலபி விபத்து: காயமுற்ற தேசிய சேவையாளர்கள் மீண்டும் படைகளில் சேர்ந்தனர்

2 mins read
f7a2b7a8-5819-4852-9cc4-8942a26ee63b
‌ஷோல்வாட்டர் பகுதியில் ராணுவப் பயிற்சியில் ஈடுபட்ட சிங்கப்பூரின் ஹன்டர் கவச வாகனம். - படம்: தமிழ் முரசு

ஆஸ்திரேலியாவில் குவீன்ஸ்லாந்து மாநிலத்தில் நடைபெறும் வாலபி ராணுவப் பயிற்சியில் நிகழ்ந்த விபத்தில் காயமுற்ற 12 சிங்கப்பூர் ஆயுதப் படை தேசிய சேவையாளர்களுக்கு சிகிச்சை வழங்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

செவ்வாய்க்கிழமையன்று (செப்டம்பர் 24) அச்சம்பவம் நிகழ்ந்தது. காயமடைந்த தேசிய சேவையாளர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.

சிகிச்சை பெற்ற பிறகு அந்த தேசிய சேவையாளர்கள் மீண்டும் தங்கள் படைகளில் சேர்ந்துகொண்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. ‘சிங்கப்பூர் ஆர்மி’ ஃபேஸ்புக் பக்கத்தில் புதன்கிழமையன்று (செப்டம்பர் 25) இத்தகவல்கள் வெளியிடப்பட்டன.

பயிற்சிகள் மீண்டும் தொடர்வதாகவும் பாதுகாப்பு இடைவெளியைப் பின்பற்றுவதில் கவனம் செலுத்தப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டது. குறிப்பாக எதிரில் இருப்பது தெளிவாகத் தெரியாத சூழலில் இது பொருந்தும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

செவ்வாய்க்கிழமையன்று உள்ளூர் நேரப்படி மாலை 7.40 மணியளவில் (சிங்கப்பூர் நேரப்படி 5.40 மணி) ஹன்டர் ரக கவச வாகனம் ஒன்று வேறொரு கவச வாகனத்துடன் மோதியது. வாலபி பயிற்சியின்போது ஷோல்வாட்டர் பே பகுதியில் இருக்கும் தளத்திற்குத் திரும்பிச் செல்லும்போது அந்த விபத்து நிகழ்ந்தது.

2019ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட ஹன்டர் ரக கவச வாகனத்தை மூவர் செலுத்துவர். வாகன தளபதி (vehicle commander), துப்பாக்கியைச் செயல்படுத்துபவர், வாகன ஓட்டுநர் ஆகியோர் கவச வாகனத்தை இயக்குபவர்கள். மேலும், ஒரு வாகனத்தில் கூடுதலாக எட்டு ராணுவ வீரர்களை ஏற்றிச் செல்ல முடியும்.

வாலபி பயிற்சி, சிங்கப்பூர் ஆயுதப் படை வெளிநாடுகளில் மேற்கொள்ளும் ஆகப் பெரிய அளவிலான ஒருதரப்புப் பயிற்சியாகும். ஹன்டர் கவச வாகனம், அப்பயிற்சியில் முதன்முறையாகப் பங்கேற்கிறது.

குறிப்புச் சொற்கள்