ஆஸ்திரேலியாவின் ஷோல்வாட்டர் பேயில் சிங்கப்பூர் ஆயுதப் படையைச் சேர்ந்த 5,000க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
சிங்கப்பூர் ஆயுதப் படை ஆண்டுதோறும் வெளிநாட்டில் மேற்கொள்ளும் ஆகப் பெரிய ஒருதரப்புப் பயிற்சியான ‘எக்சர்சைஸ் வாலபி’, இவ்வாண்டு செப்டம்பர் 7ஆம் தேதியிலிருந்து நவம்பர் 2ஆம் தேதிவரை நடைபெறுகிறது.
ஷோல்வாட்டர் பேயில் அமைந்திருக்கும் இந்தப் பயிற்சித் தளம் சிங்கப்பூரின் பரப்பளவைவிட ஏறக்குறைய ஐந்து மடங்கு பெரியது என்பது குறிப்பிடத்தக்கது.
மூன்று பாகங்களாகப் பிரிக்கப்பட்ட எக்சர்சைஸ் வாலபியின் இறுதிப் பகுதி தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.
எக்சர்சைஸ் வாலபியின் 35 ஆண்டுகளில் முதன்முறையாக அதிநவீன பீரங்கி ஏவுகணைத் திட்டம் என்னப்படும் ‘ஹை மொபிலிட்டி ஆர்ட்டிலரி ராக்கெட் சிஸ்டம்’ (ஹைமார்ஸ்) நேரடிச் சுடுதல் பயிற்சி நடைபெறுகிறது.
‘ஹைமார்ஸ்’ பீரங்கிப் படைகளுக்குத் துல்லியமான குண்டுவீச்சுத் திறனை வழங்குவதோடு வழிகாட்டப்பட்ட MLRS M31 யூனிட்டரி ஏவுகணைகளைப் பயன்படுத்தி, 70 கிலோமீட்டர் தொலைவுவரை தாக்கும் திறனையும் கொண்டுள்ளது.
இந்தப் புதிய சேர்க்கை, பயிற்சியின் இறுதிக் கட்டத்தில் இடம்பெறும் சிங்கப்பூர் ராணுவத்திற்கும் சிங்கப்பூர் ஆகாயப்படைக்கும் இடையேயான ஒருங்கிணைந்த நேரடிச் சுடுதல் பயிற்சியின் முக்கிய அங்கமாகும்.
‘ஹைமார்ஸ்’ பீரங்கியுடன் AH-64D அப்பாச்சி தாக்குதல் ஹெலிகாப்டர்களும் F-16 போர் விமானங்களும் இந்த ஒருங்கிணைந்த சுடுதல் பயிற்சியில் பங்கேற்கின்றன.
தொடர்புடைய செய்திகள்
பயிற்சியின் மற்றோர் அம்சமாக, ஆளில்லா வானூர்திகளும் (UAV) பயன்படுத்தப்பட்டன.
கடந்த மாதம் நிறைவடைந்த எக்சர்சைஸ் வாலபியின் முதல் பகுதியில், சிங்கப்பூர் ராணுவத்தின் கவசப்படை, ராணுவப் போர்ப் பொறியாளர் குழுமம், சமிக்ஞை மற்றும் ராணுவ உளவுத்துறை முதலிய பிரிவுகள் பயிற்சி மேற்கொண்டன. சிங்கப்பூர் ஆகாயப்படையின் வாகனங்களும் பங்கேற்றன.
இரண்டாம் பகுதியில், சிங்கப்பூர் ராணுவத்தின் காலாட்படை, கவசப்படை, தரைப்படை, வேவுத்துறை, போக்குவரத்து பிரிவுகள், சிங்கப்பூர் ஆகாயப்படையின் விமானங்கள், தரை மைய ஆகாயத் தற்காப்புத் திட்டம் முதலியவை இடம்பெற்றன.
புதிய கருத்துகள், புத்தாக்கங்களுக்கான சோதனைகளை மேற்கொள்வதோடு, நமது பல்வகைத் திறன்களை மேம்படுத்துவதும் எக்சர்சைஸ் வாலபியின் முக்கிய நோக்கங்களாகும் என்று மூன்றாம் பகுதியின் ஆகாயப்படை இயக்குநர் கர்னல் வூ சின் பூன் கூறினார்.
மின்னிலக்க ஒருங்கிணைப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய அவர், “தரைப்படையினருக்கும் ஆகாயப்படை செயல்பாடுகளுக்கும் இடையில் ஒருங்கிணைப்பு இருப்பதில் பெருமதிப்பு இருக்கிறது. அதற்கான சிறந்த வழிமுறை மின்னிலக்க வழிகளைப் பயன்படுத்துவதே ஆகும்,” என்றும் குறிப்பிட்டார்.
இந்தத் தடையற்ற ஒருங்கிணைப்பிற்கான உந்துதலுக்கு வலுவான செயல்பாடுகள்-தொழில்நுட்பப் பங்காளித்துவம் ஆதரவளிக்கிறது. எதிர்காலக் கட்டமைப்புகள், தொழில்நுட்ப இயக்ககம் (FSTD), தற்காப்பு அறிவியல், தொழில்நுட்ப அமைப்பு (DSTA), மற்றும் டிஎஸ்ஓ தேசிய ஆய்வுக்கூடங்கள் (DSO) உள்ளிட்ட பாதுகாப்புத் தொழில்நுட்ப சமூகத்தைச் சேர்ந்த பொறியாளர்களும் தொழில்நுட்ப வல்லுநர்களும் ராணுவ வீரர்களுடன் களத்தில் இணைந்துள்ளனர்.
இந்தக் கூட்டு முயற்சியானது இயந்திரவியல், செயற்கை நுண்ணறிவு, அடுத்த தலைமுறையுடனான இணைப்பு போன்ற அம்சங்களை உள்ளடக்கிய, 20க்கும் மேற்பட்ட புதிய தொழில்நுட்பப் பயன்பாடுகளைக் களத்தில் மதிப்பிட்டுச் செய்து வருகிறது.
ஷோல்வாட்டர் பே பயிற்சித் தளம் வழங்கும் பரந்த இடவசதி, சிங்கப்பூர் ஆயுதப்படை தனது வான், நிலம், மின்னிலக்கத் துறைகளில் உள்நாட்டில் செய்ய இயலாத அளவில் ஒருங்கிணைந்து செயல்படும் திறனை வலுப்படுத்த உதவுவதாக இவ்வாண்டின் பயிற்சி துணை சிங்கப்பூர் ஆயுதப்படைத் தலைவர் கர்னல் ஆண்டி குவெக் குறிப்பிட்டார்.
மேலும், “பெரிய அளவிலான வெளிநாட்டுப் பயிற்சிகள் இயல்பாகவே ஆபத்தானவை என்றாலும், சிங்கப்பூர் ஆயுதப்படையைப் பொறுத்தவரை பாதுகாப்பு என்றும் முதன்மையில் இருக்கிறது,” எனவும் அவர் சொன்னார்.


