சிங்கப்பூரின் எரிசக்தித் துறையைப் பிரதிபலிக்கும் சின்னத்தை வடிவமைக்கும் போட்டியை எரிசக்திச் சந்தை ஆணையம் (ஈஎம்ஏ) வெள்ளிக்கிழமை (நவம்பர் 13) தொடங்கியது. ‘இமாஜினேஷன் சேலஞ்ச்’ எனப்படும் இப்போட்டியில் தேர்ந்தெடுக்கப்படும் சிறந்த படைப்புக்கு $10,000 பரிசு வழங்கப்படும்.
15 முதல் 35 வயதுக்கு உட்பட்ட சிங்கப்பூர்க் குடிமக்களும் நிரந்தரவாசிகளும் இப்போட்டியில் பங்கேற்கலாம். படைப்புகளைச் சமர்ப்பிப்பதற்கான இறுதி நாள் அடுத்த ஆண்டு மார்ச் 31ஆம் தேதி.
இளையர்களுக்கான இப்போட்டி, ஈஎம்ஏ ஏற்பாடு செய்த ‘எனர்ஜி ஆர்க்கேட்’ கண்காட்சியில் அறிமுகப்படுத்தப்பட்டது.
சிங்கப்பூரின் எரிசக்தித் துறையின் வளர்ச்சி, தற்போதைய நிலை, எதிர்காலத் திட்டங்கள் ஆகியவற்றை விளையாட்டுகள் மூலம் பொதுமக்களுக்கு எடுத்துக்காட்டும் வகையில், கண்காட்சி வியாழக்கிழமை (நவம்பர் 12) தொடங்கப்பட்டது.
அனைத்து வயதினரும் பங்கேற்கக்கூடிய இது, ‘ஜங்ஷன் 8’ கடைத்தொகுதியில் நவம்பர் 15ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
எரிசக்தி, வர்த்தக, தொழில் துறை அமைச்சர் டாக்டர் டான் சீ லெங், போட்டியின் தொடக்க நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.
“அன்றாடம் மின்சாரத்தைப் பயன்படுத்தினாலும் தடையின்றி மின்சாரம் கிடைப்பதற்குப் பின்னால் உள்ள முயற்சிகளைப் பற்றி நாம் அதிகம் சிந்திப்பதில்லை. அதிகரித்துவரும் தேவையைப் பூர்த்தி செய்ய சிங்கப்பூர் புதிய எரிசக்தி ஆதாரங்களை ஆராய்ந்துவரும் நிலையில், பல்வேறு முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டியிருக்கும். இந்தக் கண்காட்சி அத்தகைய சவால்களைப் பற்றிப் பொதுமக்கள் புரிந்துகொள்ள உதவும் என நம்புகிறோம்,” என்று ‘ஈஎம்ஏ’ தலைமை நிர்வாக அதிகாரி புவா கோக் கியோங் தெரிவித்தார்.
“எதிர்கால எரிசக்தித் தேவைகள் குறித்து சிங்கப்பூரர்கள் நன்கு புரிந்துகொள்ள உதவும் வகையில் இக்கண்காட்சி அமைந்துள்ளது. விளையாட்டுகளை அடிப்படையாகக் கொண்ட இருவழித் தொடர்பு அனுபவங்கள் மூலம், எரிசக்திப் பாதுகாப்பு, அதன் விலை, நீடித்த நிலைத்தன்மை ஆகிய அனைத்து அம்சங்களிலும் கவனம் செலுத்துவதில் உள்ள சவால்களையும் அவர்கள் புரிந்துகொள்ளலாம்,” என்று ‘ஈஎம்ஏ’ பேச்சாளர் கூறினார்.
