சிங்கப்பூர் எரிசக்தி விநியோகத்தின் பின்னால் இருக்கும் அறியப்படாத பணிகளைக் காட்சிப்படுத்தும் கண்காட்சி ஒன்று பூகிஸ் சந்திப்பில் திங்கட்கிழமையன்று (ஜனவரி 19) தொடங்கியது.
அதில், உள்ளூர் புகைப்படக் கலைஞர்கள் மூவரின் கைவண்ணத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இடம்பெற்றன.
“கண்ணுக்குத் தெரியாத சக்தி. காணக்கூடிய தாக்கம்.” (Invisible Power. Visible Impact.) எனப் பெயரிடப்பட்டுள்ள அக்கண்காட்சியில், திருவாட்டி அம்ரிதா சந்திரதாஸ், திரு லீ ஐக் சூன், திரு லீ யிக் கீட் ஆகியோரின் 30க்கும் மேற்பட்ட புகைப்படங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
எரிசக்திச் சந்தை ஆணையத்தால் அக்கண்காட்சி நடத்தப்படுகிறது.
சிங்கப்பூரின் அன்றாட எரிசக்தித் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் ஈடுபட்டுள்ள மக்களைப் பற்றியும் உள்கட்டமைப்பைக் குறித்தும் அறிவதற்காக ஆணையம் நடத்தும் முதல் புகைப்படக் கண்காட்சி இதுவாகும்.
தெங்கா நீர்த்தேக்கத்தில் உள்ள செம்ப்கார்ப் தெங்கா மிதக்கும் சூரிய எரிசக்தி உற்பத்தி நிலையத்தை “கரண்ட்ஸ் ஆஃப் லைட்” எனும் தொடரில் திருவாட்டி சந்திரதாஸ் ஆவணப்படுத்தினார். அதில், 122,000க்கும் மேற்பட்ட மிதக்கும் சூரிய மின் தகடுகளின் படங்கள் இருந்தன.
திரு லீ ஐக் சூன்னின் புகைப்படங்கள், ஜூரோங்கில் உள்ள சிங்கப்பூரின் திரவ இயற்கை எரிவாயு முனையத்தைப் பற்றியது.
திரு லீ யிக் கீட், எஸ்பி குழுமத்தின் எரிசக்திக் கட்டமைப்பின் உள்கட்டமைப்பைக் குறிக்கும் புகைப்படங்களை எடுத்தார்.

