அறிவார்ந்த பயணத் திட்டம் விரிவாக்கம்; பயணிகளுக்கு 80% வரை கட்டணச் சலுகைகள்

அறிவார்ந்த பயணத் திட்டம் விரிவாக்கம்; பயணிகளுக்கு 80% வரை கட்டணச் சலுகைகள்

2 mins read
00f7ec59-e1fd-4325-9dda-e1c7450d864e
பயணச் செலவினங்களில் உதவிக்கரம் வழங்கவும் சுமுகமான பயணத்தை அமைத்துத் தரும் நோக்குடனும் பயணக் கட்டணத்தில் 80 விழுக்காடு வரை கட்டணத் தள்ளுபடிகள் கிடைக்கவுள்ளன. - கோப்புப் படம்: எஸ்பிஎச்

நிலப் போக்குவரத்து ஆணையம், பயண உச்ச நேரங்களில் ரயிலுக்குப் பதில் பேருந்தில் செல்வதை ஊக்குவிக்கும் அறிவார்ந்த பயணத் திட்டத்தை (Travel Smart Journeys scheme) அதிக பேருந்துச் சேவைகளுக்கு விரிவுபடுத்தவும் அதன்வழி பயணக் கட்டணத்தில் 80 விழுக்காடு வரை கட்டணத் தள்ளுபடிகளை வழங்கவும் உள்ளது.

இந்தத் தகவலை வெளியிட்ட போக்குவரத்து அமைச்சர் சீ ஹொங் டாட், அதிக அளவில் அர்த்தமுள்ள கட்டணச் சலுகைகளை வழங்குவது இதன் நோக்கம் என்று கூறினார்.

“காலை 7.45 மணிக்குள்ளாக மேற்கொள்ளப்படும் பயணங்களுக்கு தற்போதுள்ள 50 காசு தள்ளுபடிக்கு மேல், ஏறத்தாழ 80 விழுக்காடு வரையிலான கட்டணச் சலுகைகளை வழங்கும் வகையில் பயணத் திட்டத்தை ரயில் சேவைகளுக்கும் நீட்டிக்க நிலப் போக்குவரத்து ஆணையம் ஆலோசித்து வருகிறது,” என்றார் அமைச்சர் சீ.

இந்த நடவடிக்கை, காலை நேர பயண உச்ச நேரங்களைத் தவிர்த்து தங்கள் பயண அட்டவணையை மாற்றியமைக்கும் ரயில் பயணிகளுக்கு கட்டணச் சேமிப்பை வழங்கும் என்றும் அமைச்சர் கூறினார்.

ஆரம்பகட்டமாக, வடகிழக்கு ரயில் பாதையில் உள்ள பொங்கோல், செங்காங், புவாங்கோக், ஹவ்காங் எம்ஆர்டி நிலையங்கள் மற்றும் பொங்கோல், செங்காங் எல்ஆர்டி நிலையங்களிலிருந்து தொடங்கும் பயணங்களில் கவனம் செலுத்தப்படும் என்றும் திரு சீ சொன்னார்.

இதன் மூலம் பயணிகள் காலை உச்ச நேரத்தைத் தவிர்க்கும் வகையில் பயண நேரத்தைச் சரிசெய்தால் வடகிழக்கு வட்டாரக் குடியிருப்பாளர்கள், கூட்ட நெரிசலைச் சமாளிப்பதற்கான மேம்படுத்தப்பட்ட திட்டத்தின்கீழ் பொதுப் போக்குவரத்துக் கட்டணங்களில் 80 விழுக்காடு வரை தள்ளுபடியைப் பெற முடியும்.

அவர்களால் குறைந்த கட்டணத்தைப் பெற முடியும் என்ற அமைச்சர் சீ, ஆணையம் அது பற்றிய கூடுதல் விவரங்களைப் பகிரும் என்றும் குறிப்பிட்டார்.

பயணச் செலவினங்களில் உதவிக்கரம் வழங்குதல் மற்றும் சுமுகமான பயணத்தை அமைத்துத் தரும் நோக்குடன் மக்களுக்கான பற்பல திட்டங்கள் தயாராகி வருகின்றன. 2025ல் அது தொடர்பான அறிவிப்புகள் வெளியாகும் என்று அறியப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்