தாதியராகப் பயிற்சி பெற்று வரும் அபிகேல் லிம், மருத்துவமனையில் தனியாக வந்திருக்கும் வயதான நோயாளிகளைக் காணும்போதெல்லாம் பரிதாபப்படுவார்.
அவரது தாயார் ஜென்னி டியோ, 52, தனது மகள் அபிகேல் லிம்மையும் மகனையும் மூத்தோர் தலைமுறைத் தூதராகச் சேவையாற்றும்படி அறிவுரை கூறினார்.
இதை ஏற்றுக்கொண்டு இருவரும் தொண்டூழியம் செய்து வந்தனர்.
இதற்கு தற்போது நல்லதோர் அங்கீகாரம் கிடைத்துள்ளது.
அக்டோபர் 12ஆம் தேதி நடைபெற்ற மூத்தோர் தலைமுறை அலுவலகத்தின் (Silver Generation Office: SGO) 10வது ஆண்டு நிறைவு விழாவில் அவர்களது குடும்பம் கெளரவிக்கப்பட்டது.
அவ்விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட சுகாதார அமைச்சர் ஓங் யி காங், முதியோருக்கு உதவும் வகையில் அரசாங்கம் கூடுதலாக 140 மில்லியன் நிதியை ஒதுக்கும் என்று அறிவித்தார். 2024 முதல் 2028 வரை அரசாங்கம் ஏற்கெனவே $800 மில்லியன் ஒதுக்கியுள்ளது.
இந்த நிதி, 2025 முதல் 2027 வரை 100க்கும் மேற்பட்ட துடிப்புடன் மூப்படையும் நிலையங்களின் (Active Ageing Centre: AAC) விரிவாக்கத்திற்குப் பயன்படுத்தப்படும்.
உலகில் அதிவேகத்தில் மூப்படையும் மக்கள் தொகையைக் கொண்ட நாடுகளில் சிங்கப்பூரும் ஒன்றாக இருக்கிறது.
தொடர்புடைய செய்திகள்
நிகழ்ச்சியில் லிம் குடும்பத்துக்கு மூத்தோர் தலைமுறை குடும்ப விருது வழங்கப்பட்டது.
சிங்கப்பூர் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் இறுதியாண்டு தாதிமை மாணவியான செல்வி அபிகேல் லிம், 21, “முதியவர்கள் தங்களுடன் யாராவது பேச மாட்டார்களா என ஏங்குவதையும் வீட்டில் வசிக்கும் சிலருக்குத் தனிமை எப்படியிருக்கும் என்பதையும் என்னால் உணர முடிகிறது,” என்றார்.
“இதையெல்லாம் தெரிந்து அவர்களுடைய வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்த விரும்பினேன். அவர்களுடன் தோழமையுடன் பேசி உதவி செய்ய ஆரம்பித்தேன், அது சிறிய உதவியாகக்கூட இருக்கலாம். அதைத் தொடர்ந்து செய்து வருகிறேன்,” என்று அவர் கூறினார்.
அவரது சகோதரர் சேமுவேல், 24, ஆரம்பத்தில் தொண்டூழியம் செய்யத் தயங்கினார்.
“நான் சோம்பலாக இருப்பேன். எனது தாயாரின் தூண்டுதலால் தொண்டூழியம் செய்ய ஆரம்பித்தேன். தொண்டூழியம் செய்யும்போதுதான் முதியோர் பற்றிய புரிதல் ஏற்படுகிறது,” என்றார் அவர்.
தற்போது வாரத்திற்கு ஒருமுறை அவர் ஆர்வத்துடன் தொண்டூழியம் செய்து வருகிறார்.
துடிப்புடன் மூப்படையும் நிலையங்கள் பொதுவாக புளோக்குகளின் வெற்றுத்தளத்தில் செயல்படுகின்றன.
இங்கு, மூத்தோர் சமூக, பொழுதுபோக்கு நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர். அவர்களிடம் தோழமை உணர்வுடன் பழகி, பராமரிப்பு சேவைகளுக்கான பரிந்துரைகள் வழங்கப்படுகின்றன.

