உலக நகரங்களுக்கு இடையில் கருத்துப் பரிமாற்றம் முக்கியம்: அமைச்சர் சீ

உலக நகரங்களுக்கு இடையில் கருத்துப் பரிமாற்றம் முக்கியம்: அமைச்சர் சீ

3 mins read
5fd2d05a-06f9-431a-b598-e67016d4b6f1
‘உலக நகரங்கள் உச்சநிலைக் கூட்ட மேயர்கள் கருத்தரங்கில்’ பங்கேற்ற பல உலக நகரங்களைச் சேர்ந்த பேராளர்களுடன் தேசிய வளர்ச்சி அமைச்சர் சீ ஹொங் டாட், பிரதமர் அலுவலக அமைச்சரும், நிதி, தேசிய வளர்ச்சி இரண்டாம் அமைச்சருமான குமாரி இந்திராணி ராஜா. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

நகரத் தலைவர்களும் நிபுணர்களும் நகரத்தின் பாதிப்புகளைக் குறைப்பதைத் தாண்டி, நலன்களை உருவாக்க ஆதரவளிக்கும் கட்டமைப்பைச் சிங்கப்பூரின் வாழத்தகு நகரங்கள் நிலையம் உருவாக்கியுள்ளது.

மீள்திறன், வளத்திறன், வாழக்கூடிய தன்மை ஆகிய அம்சங்களில் பகிரப்பட்ட பலன்களை முனைப்புடன் உருவாக்கும் நோக்கில், ‘நிலைத்தன்மைக்கு அப்பால்: நமது நகரங்களுக்கான மறுஉருவாக்க எதிர்காலத்தைக் கட்டமைத்தல்’ எனும் பதிப்பினை நிலையம் அறிமுகப்படுத்துகிறது.

சன்டெக் மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற ‘உலக நகரங்கள் உச்சநிலைக் கூட்ட மேயர்கள் கருத்தரங்கில்’ பேசிய தேசிய வளர்ச்சி அமைச்சர் சீ ஹொங் டாட் இதனைத் தெரிவித்தார்.

‘ஆக்ட் நவ்’, அதாவது ‘இப்போதே செயல்படுங்கள்!’ எனும் கருப்பொருளில் அமைந்த மூன்று நாள் மாநாடு ஜூன் 14ஆம் தேதி தொடங்கியது. மாநாட்டின் முதல் நாளில் நடைபெற்ற கருத்தரங்கில் உலகின் 103 நகரங்களைச் சேர்ந்தோர் பங்கேற்றனர்.

வீட்டுவசதி, நீர் மேலாண்மை, மாற்று எரிசக்தி, நகராட்சிச் சேவைகள் எனப் பலவற்றின் தொடர்பில் பங்கேற்பாளர்கள் கருத்துகளைப் பகிர்ந்துகொண்டனர்.

இவற்றில் சிங்கப்பூர் மேற்கொள்ளும் முயற்சிகள் குறித்து அமைச்சர் சீ விளக்கினார்.

உலக நகரங்கள் சந்திக்கும் நான்கு முக்கியச் சவால்களைப் பற்றி அவர் விவரம் அளித்தார்.

“நீடித்த தீர்வுகள் தனித்து உருவாக்கப்படுவதில்லை. ஒத்துழைப்பு, அறிவு, அனுபவப் பரிமாற்றங்களால் உருவாகிறது,” என்றார் அவர்.

அவற்றுக்கான பதிப்புகளை வெளியிடுவதாகவும் அவை நகரத் தலைவர்களுக்கும் செயல்முறை வல்லுநர்களுக்கும் பயனுள்ளதாக இருக்குமென நம்புவதாகவும் திரு சீ தெரிவித்தார்.

இந்த மீட்டுருவாக்க அணுகுமுறை, கட்டடச் சூழலைத் தாண்டி இயற்கையுடனான தொடர்பிலும் கவனம் செலுத்துகிறது.

‘மண்டாய்: இயற்கைக்கும் வளர்ச்சிக்குமிடையிலான சமநிலை’ எனும் ஆய்வுகளை வாழத்தகு நகரங்கள் நிலையம் வெளியிட்டுள்ளதாகவும் அவர் சொன்னார்.

இது, நகர்ப்புறத் திட்டமிடல், மேம்பாட்டு முடிவுகளில் சூழலியல் உணர்திறனை ஒருங்கிணைப்பது குறித்த சிந்தனைகளுக்கு உதவும் என்றும் நம்புவதாகக் குறிப்பிட்டார் அமைச்சர் சீ.

‘நகர்ப்புறத் தீர்வுகள்’ இதழின் அண்மை பதிப்பை வாழத்தகு நகரங்கள் நிலையம் வெளியிட்டதை அவர் சுட்டினார்.

அது, ‘இப்போதே செயல்படுங்கள்!’ எனும் மாநாட்டின் கருப்பொருளுக்கேற்ப, சிந்தனைகளைச் செயலாக்கும் உத்திகளை ஆராய்வதாகவும் அவர் கூறினார்.

சிறப்பாகச் செயல்பட்ட நகரங்களிலிருந்து பெற்ற பாடங்களைத் தொகுத்துள்ளதாகச் சொன்ன அவர், “நகர மறுசீரமைப்பு ஆணையம், லீ குவான் யூ உலக நகரப் பரிசு குறித்த புதிய பதிப்பொன்றை உருவாக்கியுள்ளது. இதில் 2026ஆம் ஆண்டு பரிசு வென்ற நகரத் தலைவர்களின் ஆழமான பார்வைகளும் நகர்ப்புற சவால்களைச் சமாளிக்கும் புதிய உத்திகளும் அடங்கியுள்ளன,” என்றார் அவர்.

செயல்பாட்டுச் சூழலை மாற்றியமைக்கும் புவிசார் அரசியல்

உலகளாவிய நிச்சயமற்றதன்மை பெருகிவரும் காலகட்டத்தில் நகரங்கள் ஒன்றுகூடுவதாகத் தமது உரையில் குறிப்பிட்ட அமைச்சர் சீ, புவிசார் அரசியல் பதற்றம், விநியோகச் சங்கிலி இடையூறுகள், காலநிலை மாற்றங்கள், பொருளியலில் நிலையற்றதன்மை ஆகியவை நகரங்கள் செயல்படும் சூழலை மாற்றியமைப்பதாகக் கூறினார்.

இச்சவால்கள் அளவில் அதிகரிப்பதுடன், அதற்கேற்பச் செயல்படவேண்டியதன் வேகமும் அதிகரிப்பதை அவர் சுட்டினார்.

நடைமுறைத் தீர்வுகளைச் செயல்படுத்துவதை நகரங்கள் விரைவுபடுத்துவதுடன், உலக நகரங்களுக்கிடயிலான ஒத்துழைப்பும் கருத்துப் பறிமாற்றமும் முக்கியம் என்று திரு சீ வலியுறுத்தினார்.

“இவ்வாறு செய்வதன்மூலம், செயல்முறைக் கற்றல் காலத்தைக் குறைத்து, உலக நகரங்களுக்கு இடையிலான வலுவான நம்பிக்கையையும் கூட்டு முயற்சிகளையும் உருவாக்குகிறோம்,” என்றார் அவர்.

சிங்கப்பூரின் பொது வீடமைப்புத் திட்டத்தைச் சமூகத் தாக்கத்தின் அடித்தளம் என்று விவரித்த அவர், இங்கு வீட்டு உரிமையாளர் விகிதம் உலகிலேயே ஆக அதிக அளவில், 90 விழுக்காடாக இருப்பதையும் சுட்டினார்.

அவை, வெறும் கட்டடங்களாக இல்லாமல், வாழத்தகு சமூகமாக, மூத்தோருக்கும் உகந்ததாக இருப்பதில் கவனம் செலுத்துவதைக் குறிப்பிட்டார் அமைச்சர் சீ.

தாழ்வான நிலப்பரப்பில், தீவு நகர-நாடாக இருப்பதால், சிங்கப்பூர் கடல்மட்ட உயர்வினாலும் தீவிர மழைப்பொழிவாலும் பாதிக்கப்படக்கூடியது என்று அவர் குறிப்பிட்டார். எனவே நான்கு தேசிய நீர்வழிகளை அடிப்படையாகக் கொண்ட நீர்ப்பாதுகாப்பு அணுகுமுறை செயல்பாட்டில் உள்ளதாக அவர் சொன்னார்.

நகர்ப்புற எரிசக்தி மாற்றத்திற்குச் சில கடினமான சமரசங்கள் தேவைப்படும் என்பதை ஒப்புக்கொண்டதுடன் மாற்றத்திற்கான செலவுகளை விட, செயலற்றதன்மையின் செலவு, எதிர்காலச் சந்ததியினருக்கு மிக அதிகமாக இருக்குமென்றும் அவர் எச்சரித்தார்.

கருத்தரங்கின் இறுதியில், மெக்சிக்கோ நகரில் அடுத்த ஆண்டுக்கான ‘உலக நகரங்கள் உச்சநிலைக் கூட்டம்’ நடைபெறுவதன் தொடர்பில் ஒப்பந்தம் கையெழுத்திடப்படுவதாகவும் தெரிவித்தார் அமைச்சர் சீ.

குறிப்புச் சொற்கள்