‘எம்பாக்ஸ்’ கிருமி தொற்றியதாகச் சந்தேகிக்கப்படுவோரிடம் பாதிப்பை உறுதிசெய்யும் நோக்கில் ‘ஏஆர்டி‘ எனப்படும் ஆன்டிஜன் விரைவுப் பரிசோதனை முறையைப் பயன்படுத்துவது குறித்து மதிப்பீடு செய்து வருவதாகக் கூறுகிறார், தேசியத் தொற்றுநோய் சிகிச்சை நிலையத்தின் மருத்துவ இயக்குநர் டாக்டர் ஷான் வாசு.
மருத்துவமனையில் ‘எம்பாக்ஸ்’ பாதிப்புக்காளானோர் அனுமதிக்கப்பட்டால் அதன் தொடர்பில் சுற்றுப்புறத்தில் ‘எம்பாக்ஸ்’ பரவல் குறித்து அறிவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றார் அவர்.
சிங்கப்பூரில் ‘எம்பாக்ஸ்’ நோய்த்தொற்றைச் சமாளிக்கும் வகையில் மேற்கொள்ளப்படும் ஒருங்கிணைந்த சுகாதார நடவடிக்கைகள் தொடர்பில் அவரது நிபுணத்துவக் கருத்தை அறிய முற்பட்டது தமிழ் முரசு.
அதன் தொடர்பில் இந்நோய்ப் பரவல், இதற்குரிய சுகாதாரப் பாதுகாப்பு ஆகியவை குறித்த கேள்விகளுக்குப் பதிலளித்தார் மருத்துவர் வாசு.
“‘ஆர்த்தோபாக்ஸ் வைரஸ்’ கிருமிக் குழுமத்தைச் சார்ந்த ‘எம்பாக்ஸ்’ நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்ட ஒருவருடன் நெருங்கிய தொடர்பில் இருப்பவருக்குத் தோல் வழியாக அது பரவுகிறது.
“எனினும் மத்திய ஆப்பிரிக்கா போன்ற பகுதிகளில் இந்நோயின் தாக்கம் உள்ள நிலையில், அங்கு விலங்குகள் வாயிலாகவும் மக்கள் ‘எம்பாக்ஸ்’ தொற்றக்கூடும்,” என்று மருத்துவர் வாசு விளக்கினார்.
‘எம்பாக்ஸ் கிளேட் 1’ , ‘எம்பாக்ஸ் கிளேட் 2’ என இரு திரிபுகள் உள்ளதாகக் கூறிய அவர், இவற்றில் ‘கிளேட் 2’ திரிபைவிட ‘கிளேட் 1’ திரிபு கடுமையான நோயை உண்டாக்கக்கூடியது என்றார்.
மேலும், ‘எம்பாக்ஸ் கிளேட் 1’ திரிபில், ‘கிளேட் 1B எனும் புதிய வகை, 2023ஆம் ஆண்டின் பிற்பகுதியில் காங்கோ குடியரசில் கண்டறியப்பட்டதாக அவர் சொன்னார்.
தொடர்புடைய செய்திகள்
‘எம்பாக்ஸ்’ நோயாளிகள், கிருமி தொற்றியதாகச் சந்தேகிக்கப்படுவோரை மதிப்பிடும்போதும் பராமரிக்கும் போதும், சுகாதாரப் பராமரிப்பு ஊழியர்கள், தனிநபர் பாதுகாப்புச் சாதனத்தைப் பயன்படுத்துவர் என்றார் அவர். முழுக்கை உடுப்புகள், கையுறைகள், கண் பாதுகாப்புச் சாதனங்கள், N95 முகக் கவசம் போன்றவை அதில் அடங்கும்.
‘எம்பாக்ஸ்’ தொற்றுக்கு எதிரான தடுப்பூசிகள் எவ்வளவு காலம் நோய் எதிர்ப்பு ஆற்றலை அளிக்கும் என்பது குறித்து ஆய்வு செய்யத் திட்டமிடப்படுவதாக மருத்துவர் வாசு கூறினார்.
இந்நோய்க்கு சிகிச்சை தேவைப்படும் நோயாளிகள் நிலையத்தில் இருந்தால், கிருமி ஒழிப்பு சிகிச்சை அவர்களுக்கு எத்தகைய பலனளிக்கிறது என்பது குறித்தும் ஆய்வு செய்யத் திட்டமிடுவதாக அவர் குறிப்பிட்டார்.

