சிங்கப்பூரின் இவ்வாண்டுக்கான பொருளியல் வளர்ச்சியைத் தனியார் துறை பொருளியல் வல்லுநர்கள் மேல்நோக்கித் திருத்தியுள்ளனர்.
இதற்குமுன் பொருளியல் வளர்ச்சி 3.5 விழுக்காடாக இருக்கும் என்று அவர்கள் முன்னுரைத்தனர். எனினும், இவ்வாண்டின் முற்பாதியில் ஏற்றுமதிகளும் உற்பத்தி வெளியீடும் திடீரென அதிகரித்ததை அடுத்து பொருளியல் வளர்ச்சி 5 விழுக்காடாக இருக்கும் என்று அவர்கள் குறிப்பிட்டனர்.
அனைத்துலக அளவில் செயற்கை நுண்ணறிவுத் துறை வளர்ந்துவரும் வேளையில், சிங்கப்பூரின் மொத்த உள்நாட்டு உற்பத்திக்கான முன்னுரைப்பை வர்த்தக, தொழில் அமைச்சு மேல்நோக்கித் திருத்தியது.
மொத்த உள்நாட்டு உற்பத்தி 2லிருந்து 4 விழுக்காடாக இருக்கும் என்று கூறிய அமைச்சு, ஆகஸ்ட் 11ஆம் தேதி, அது 4.5 விழுக்காட்டிலிருந்து 5.5 விழுக்காடாக இருக்கும் என்று கூறியது.
அதையடுத்து சிங்கப்பூர் நாணய ஆணையம் காலாண்டுக்கான நிபுணத்துவ முன்னுரைப்பாளர்களின் ஆய்வை வெளியிட்டது.
இவ்வாண்டுக்கான எண்ணெய் சாரா உள்நாட்டு ஏற்றுமதிகளின் வளர்ச்சிக்கான முன்னுரைப்பையும் என்டர்பிரைஸ் சிங்கப்பூர் அமைப்பு ஆகஸ்ட் 11ஆம் தேதி மேம்படுத்தியது.
இதற்குமுன் அந்த வளர்ச்சி 3லிருந்து 5 விழுக்காடாக இருக்கும் என்ற அமைப்பு, அது 14 விழுக்காட்டிலிருந்து 16 விழுக்காட்டிற்கு இடைப்பட்டிருக்கும் என்றது.
சிங்கப்பூரின் பொருளியல் ஆண்டுக்கு ஆண்டு என்ற அடிப்படையில் இவ்வாண்டின் இரண்டாம் காலாண்டில் 5.9 விழுக்காட்டு வளர்ச்சியடைந்தது. முதலாம் காலாண்டில் அது 6.3 விழுக்காடாக இருந்தது.
சிங்கப்பூர் நாணய ஆணையத்தின் கருத்தாய்வில் பங்கேற்ற அனைத்து பொருளியல் வல்லுநர்களும் சிங்கப்பூரின் பொருளியல் முன்னுரைப்புக்குச் செயற்கை நுண்ணறிவால் உந்தப்பட்ட தொழில்நுட்ப வளர்ச்சியே முக்கியக் காரணம் என்று குறிப்பிட்டனர்.
மத்திய கிழக்குப் போர் தணிந்தாலோ முடிவுக்கு வந்தாலோ, எதிர்பார்த்ததைவிட வலுவான உலகளாவிய பொருளியல் நாட்டின் பொருளியலுக்குச் சாதகமான வளர்ச்சியை அளிக்கக்கூடும் என்பதை அவர்கள் சுட்டினர்.
இருப்பினும், இப்போது ஆறு மாதங்களாக நீடிக்கும் ஈரான் போர் மேலும் மோசமடைந்தாலோ நீண்டகால போராக மாறினாலோ, சிங்கப்பூரின் பொருளியல் கண்ணோட்டத்தில் பின்னடைவை ஏற்படுத்தக்கூடும் என்று ஆய்வறிக்கை குறிப்பிட்டது.


