ஆக்கமுறை செயற்கை நுண்ணறிவு (generative AI), மனிதவளத் தேவைகள் போன்றவற்றினால் ஏற்படக்கூடிய ஊழியரணிப் பிரச்சினைகளை ஆராய்வதற்கான முயற்சிகளை மேற்கொள்ளும் தொழில்துறை வல்லுநர்கள், கல்வியாளர்கள், ஆய்வாளர்கள் ஆகியோருக்குக் கூடுதல் ஆதரவு வழங்கப்படவுள்ளது.
அந்த வகையில், ஊழியரணிக் கூட்டணி ஒத்துழைப்புக் கற்றல் குழுவை (Lab) தேசிய தொழிற்சங்க காங்கிரஸ் (என்டியுசி) தொடங்கியுள்ளது. தற்போதைக்கு 50 உள்ளூர் வல்லுநர்களைக் கொண்டுள்ள அக்குழுவை வியாழக்கிழமையன்று (செப்டம்பர் 26) நடைபெற்ற மாநாடு ஒன்றில் என்டியுசி தொடங்கி வைத்தது.
அதன்கீழ், நிதியுதவி, தேவையான வளங்களைப் பெறுவது, தரவுப் பகிர்வு போன்றவற்றில் வல்லுநர்கள் கூடுதல் ஆதரவு பெறுவர்.
இதுகுறித்துப் பேசிய என்டியுசி தலைமைச் செயலாளர் இங் சீ மெங், “வேலையிடங்கள் உருமாறிவரும் வேளையில் நமது ஊழியரணியின் மாறிவரும் தேவைகளுக்கு ஏற்றவாறு என்டியுசியும் புத்தாக்க முயற்சிகளை மேற்கொண்டு சூழலுக்கு ஏற்ப மாறி வருகிறது,” என்று கூறினார்.
“கல்வியாளர்கள், ஆய்வுக் கழகங்களோடு நாங்கள் ஒன்றுசேர்ந்து செயல்படுவது தன்னிச்சையாக ஆய்வு மேற்கொள்ள வகைசெய்கிறது, விழிப்புணர்வை ஏற்படுத்த எங்களின் முயற்சிகளுக்கு வலுசேர்க்கிறது. அதன் மூலம், ஊழியர்களின் வாழ்க்கையையும் அவர்களின் அத்தியாவசியத் தேவைகள் பூர்த்திசெய்யப்படுவதையும் மேம்படுத்தும் நோக்கில் நன்கு விவரிக்கப்பட்ட, ஆக்ககரமான, தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய கொள்கைகளுக்கிடையே தொடர்பு ஏற்படுத்த முடியும்,” என்றும் திரு இங் சீ மெங் குறிப்பிட்டார்.
ஆய்வுகளின் வாயிலாக, ஊழியர்களின் சம்பளம், நலன் உள்ளிட்டவற்றை மேம்படுத்தும் வகையில் ஊழியரணிக் கொள்கைகளிலும் நடைமுறைகளிலும் தாக்கத்தை ஏற்படுத்துவது இலக்காகும்.
உதாரணமாக, அதன் முதல் ஆண்டில் வேலையிடத்தில் பாரபட்சமில்லாத போக்கு இருப்பது, வயதான ஊழியர்களை வேலைக்கு எடுப்பதற்கான வாய்ப்புகள் உள்ளிட்டவற்றின் தொடர்பில் ஆய்வு நடத்த ஊழியரணிக் கூட்டணி ஒத்துழைப்புக் கற்றல் குழு எண்ணம் கொண்டுள்ளது. அடுத்த மூன்று ஆண்டுகளில், புதிதாகத் தலைதூக்கும் ஊழியரணிப் போக்குகள், வேலை வாய்ப்பு, உற்பத்தித் திறன் போன்றவற்றின் தொடர்பில் ஆய்வு நடத்துவதற்கு முன்னுரிமை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊழியரணிக் கூட்டணி ஒத்துழைப்புக் கற்றல் குழு அதிகாரபூர்வமாகத் தொடங்கப்படுவதற்கு முன்பே அதில் உள்ள உறுப்பினர்கள் பலர், கடந்த ஈராண்டுகளாக பல்வேறு திட்டங்கள், ஆய்வுகள் தொடர்பில் என்டியுசியுடன் இணைந்து பணியாற்றினர் என்று என்டியுசி உதவி தலைமைச் செயலாளர் பேட்ரிக் டே இம்மாதம் 16ஆம் தேதியன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் சொன்னார்.