தொடக்கப்பள்ளி இறுதியாண்டுத் தேர்வில் ஒரே மதிப்பெண் பெறும் மாணவர்கள், அதையடுத்து ஒரே உயர்நிலைப்பள்ளியைத் தேர்ந்தெடுக்கும்போது குறைந்தபட்சப் புள்ளிகள் மேலும் ‘கடுமையாக்கப்படும்’ நிலையை எதிர்நோக்கலாம் என்று ஜனவரி 8ஆம் தேதி கல்வி மூத்த நாடாளுமன்றச் செயலாளர் ஷான் ஹவாங் கூறினார்.
“சில பிரபலமான பள்ளிகளில் இடம் கிடைப்பதற்கு 2024ஆம் ஆண்டு அதிக எண்ணிக்கையில் மாணவர்கள் பிஎஸ்எல்இ எழுதியதும் காரணமாக இருந்திருக்கலாம்,” என்று அவர் குறிப்பிட்டார்.
ஆண்டுக்கு ஆண்டு பள்ளிகளுக்கான குறைந்தபட்சப் புள்ளிகள் மாறுபடலாம் என்ற திரு ஹுவாங், அந்தந்த ஆண்டின் பிஎஸ்எல்இ மாணவர்களது மதிப்பெண்களையும் அவர்களின் பள்ளித் தெரிவுகளையும் பொறுத்து புள்ளிகள் நிர்ணயிக்கப்படும் எனச் சுட்டினார்.
உயர்நிலை ஒன்று பள்ளிச் சேர்க்கை முடிவுகள், அதிக போட்டித்தன்மை உள்ள பிஎஸ்எல்இ மாணவர்களின் பெற்றோர்களுக்கு வழங்கப்படும் வழிகாட்டுதல், தயாரிப்புப் பணிகள் ஆகியவை குறித்து பாட்டாளிக் கட்சியின் ஹெ டிங் ரூ (செங்காங் குழுத்தொகுதி) எழுப்பிய கேள்விக்கு அவர் நாடாளுமன்றத்தில் இவ்வாறு பதிலளித்தார்.
முந்தைய ஆண்டுகளின் குறைந்தபட்சப் புள்ளிகளை மாணவர்களும் பெற்றோர்களும் மேற்கோள்களாகப் பயன்படுத்த ஊக்குவிக்கப்படுவதாக திரு ஹுவாங் குறிப்பிட்டார்.