இணையத்தள ஊழியர்களின் மசே நிதிப் பங்களிப்பில் தாமதம் குறித்து விளக்கம்

இணையத்தள ஊழியர்களின் மசே நிதிப் பங்களிப்பில் தாமதம் குறித்து விளக்கம்

கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

04 Nov 2025 - 6:50 pm

2 mins read

இணையத்தளச் சேவை ஊழியர் ஒருவர் வேலை மாறும்போது அவர் மத்திய சேம நிதிக்குப் பங்களிக்க முன்வந்துள்ளாரா இல்லையா என்பது நிறுவனத்திற்குத் தெரிந்திருக்காது என்று மனிதவளத்துக்கான மூத்த நாடாளுமன்றச் செயலாளர் ‌ஷான் ஹுவாங் கூறியிருக்கிறார்.

புதிய ஊழியர்களிடையே வேலையில் சேரும் தேதிகள், சேம நிதியில் பங்களிக்கும் நிலை முதலியவை மாறுபடும்; அதனால் இணையத்தளச் சேவைகளை வழங்கும் நிறுவனங்கள் அவற்றின் தரவுகளில் அண்மைத் தகவல்களையும் சேம நிதிப் பங்களிப்பு விகிதங்களையும் சேர்ப்பதற்கு நேரம் தேவைப்படும் என்றார் அவர்.

தற்போதைய ஏற்பாட்டை இன்னும் சிறந்த முறையில் மாற்றியமைக்க முடியுமா என்பதுபற்றி இணையத்தளச் சேவை வழங்குவோருடன் மனிதவள அமைச்சு பேச்சு நடத்தத் தொடங்கியிருக்கிறது.

இணையத்தள ஊழியர்கள் வேலை மாறும்போது அவர்களின் சேம நிதியில் தொகை போடப்படாமல் இருந்தது அல்லது தாமதமடைந்தது குறித்த தகவல் ஏதேனும் அரசாங்கத்திற்குத் கிடைத்ததா என்று பொங்கோல் குழுத்தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் திருவாட்டி இயோ வான் லிங் கேட்டிருந்தார். அதற்குத் திரு ‌ஷான் ஹுவாங் பதிலளித்தார்.

இணையத்தளச் சேவை ஊழியர்கள் சட்டம், இவ்வாண்டுத் (2025) தொடக்கத்தில் நடப்புக்கு வந்தது. அதிலிருந்து அத்தகைய சேவை வழங்கும் நிறுவனங்கள், ஊழியர்களின் சேம நிதியில் அவற்றின் பங்கைச் செலுத்துவது கட்டாயமாக்கப்பட்டது. தனியார் வாடகைக் கார் ஓட்டுநர்களும் விருப்பத்திற்கேற்பப் பொருள் விநியோகச் சேவையில் ஈடுபடுவோரும் அவர்களில் அடங்குவர்.

புதிய வேலையில் சேர்ந்த பிறகு, இரண்டு மாதம் வரை சேம நிதியில் தொகை போடப்படவில்லை என்று ஊழியர்கள் சிலர் கருத்துக் கூறியிருந்ததாகத் திருவாட்டி இயோ சொன்னார். தேசியத் தொழிற்சங்க காங்கிரசின் உதவித் தலைமைச் செயலாளருமான அவர், நாடாளுமன்றத்தில் இணையத்தளச் சேவை ஊழியர்கள் தொடர்பான விவகாரங்கள் குறித்து அவ்வப்போவது பேசுவது வழக்கம்.

ஏப்ரல் மாத நிலவரப்படி, ஏறக்குறைய 22,400 இணையத்தளச் சேவை ஊழியர்கள், புதிய சட்டத்தின்கீழ் சேம நிதிப் பங்களிப்பை அதிகரிக்கும்படி கூறியுள்ளனர்.

குறிப்புச் சொற்கள்