சிங்கப்பூரின் மத்தியப் பகுதிகளில் வெவ்வேறு இல்லத் தெரிவுகள் அதிகரிக்க வேண்டும் என்ற தேவை எழுந்துள்ள நிலையில், நியூட்டனில் புதிதாக வீடுகளை எழுப்பி, வசதிகளை ஏற்படுத்துவது குறித்து நகர மறுசீரமைப்பு ஆணையம் ஆராய்ந்து வருகிறது.
“புதிய வீடமைப்புத் திட்டங்கள், வசதிகளுடன் இனிய அனுபவத்தைத் தரும் பொது இடங்கள், மரபுடைமை மணக்கும் ஒரு குடியிருப்பு வட்டாரத்தில் மேம்படுத்தப்பட்ட இணைப்பு வசதி போன்ற திட்டங்களும் உள்ளன,” எனத் தற்போது நடந்து வரும் கண்காட்சியில் ஆணையம் தெரிவித்தது.
மத்திய வட்டாரத்தில் நிகழ்கால, எதிர்கால பொழுதுபோக்கு வசதிகளை மையப்படுத்தும் இந்தக் கண்காட்சி, ஆணையத்தின் ‘பொழுதுபோக்கு பெருந்திட்டம்’ தொடர்பில் மக்களை ஈடுபடுத்துவதற்கான முயற்சியின் ஒரு பகுதியாகும்.
இந்தப் ‘பொழுதுபோக்கு பெருந்திட்டம்’ அடுத்த பெருந்திட்ட வரைவில் ஒருங்கிணைக்கப்படும். இது 2025ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்படும்.
அடுத்த 10 முதல் 15 ஆண்டகளில் சிங்கப்பூரின் மேம்பாட்டுக்கான வழிகாட்டியாக, ஆணையத்தின் பெருந்திட்டம் ஒரு சட்டபூர்வ ஆவணமாகத் திகழும்.
நியூட்டன் பகுதியின் மரபுடைமை, அடையாளம் ஆகியவற்றைக் கருத்தில் எடுத்துக்கொண்டவாறு மத்தியப் பகுதிகளில் மேலும் பலதரப்பட்ட இல்லத் தெரிவுகளை விரும்பும் சிங்கப்பூரர்களின் விருப்பத்தை நிறைவேற்றத் திட்டமிட்டுள்ளதாக ஆணையம் குறிப்பிட்டது.
மத்திய வட்டாரத்திற்கான இந்த ‘பொழுதுபோக்கு பெருந்திட்டம்’ கண்காட்சி ஆணையத்தின் நிலையத்தில் செப்டம்பர் 30ஆம் தேதி வரை இடம்பெறும்.

