இந்தியாவின் கேரள மாநிலக் கரையருகே திங்கட்கிழமை (ஜூன் 09) காலை 10 மணியளவில் (இந்திய நேரம்) சிங்கப்பூரில் பதிவு செய்யப்பட்ட MV Wan Hai 503 சரக்குக் கப்பலில் தீப்பற்றியதை அடுத்து அக்கப்பல் ஊழியர்கள் நால்வரைக் காணவில்லை.
அரபிக்கடலில் ஆழிக்கல் நகருக்குத் தென்மேற்கே 80 கிலோமீட்டர் தொலைவில் சென்றுகொண்டிருந்தபோது கப்பலில் தீ மூண்டதாக சிங்கப்பூர் கடல்துறை, துறைமுக ஆணையம் தெரிவித்துள்ளது.
‘வான் ஹய் லைன்ஸ் (சிங்கப்பூர்)’ நிறுவனத்தின் அந்தக் கப்பலில் ஊழியர்கள் 22 பேர் இருந்ததாகக் கூறப்பட்டது. அவர்களில் யாரும் சிங்கப்பூரர்கள் அல்லர்.
அந்த ஊழியர்களில் 18 பேர் மீட்கப்பட்டதாகவும் அவர்களில் சிலருக்குக் காயம் ஏற்பட்டதாகவும் ஆணையம் கூறியது.
இந்தியக் கடற்படையும் கடலோரக் காவற்படையும் அவர்களுக்குத் தேவையான உதவிகளை வழங்கியதுடன் தேடல், மீட்புப் பணிகளிலும் ஈடுபட்டிருப்பதாக ஆணையம் குறிப்பிட்டது.
வெடிப்புச் சம்பவத்தை அடுத்து கப்பலில் தீப்பற்றியதாக இந்திய ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
இலங்கைத் தலைநகர் கொழும்பிலிருந்து கடந்த சனிக்கிழமை புறப்பட்ட அந்தக் கப்பல் செவ்வாய்க்கிழமை மும்பைத் துறைமுகத்தைச் சென்றடையத் திட்டமிட்டிருந்தது.
தீ மூண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடைபெறும் வேளையில், இந்தியக் கடற்படை ‘ஐஎன்எஸ் சூரத்’ எனும் நாசகாரிக் கப்பலைச் சம்பவ இடத்திற்கு அனுப்பியதாகக் கூறப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
நிலைமையை மதிப்பிடவும் கூடுதல் உதவியை வழங்கவும் இந்தியக் கடற்படையின் ‘ஐஎன்எஸ் கருடா’ ராணுவ விமானம் அனுப்பப்பட்டதாகவும் இந்தியக் கடலோரக் காவற்படை தீயணைப்பு, மீட்புப் பணியில் இணைந்துகொண்டதாகவும் கூறப்பட்டது.
அந்தச் சரக்குக் கப்பல் ஏறத்தாழ 650 கொள்கலன்களை ஏற்றிச் சென்றதாகவும் தீச்சம்பவத்தின்போது அதிலிருந்து 20 கொள்கலன்கள் கடலில் விழுந்துவிட்டதாகவும் தெரிகிறது.