சிங்கப்பூரின் அடிப்படை ஏற்றுமதி, ஆண்டு அடிப்படையில் மூன்றாவது மாதமாக செப்டம்பரிலும் ஏற்றம் கண்டது.
ஆயினும், அந்த மாதத்தில் மெதுவான வளர்ச்சி பதிவானதாக ‘எண்டர்பிரைஸ் சிங்கப்பூர்’ அமைப்பு வியாழக்கிழமை (அக்டோபர் 17) தெரிவித்தது.
எண்ணெய் சாரா ஏற்றுமதி 2023 செப்டம்பரைக் காட்டிலும் சென்ற மாதம் 2.7 விழுக்காடு அதிகரித்தது.
அந்த வளர்ச்சி ஜூலை மாதம் 15.7 விழுக்காடாகவும் ஆகஸ்ட் மாதம் 10.7 விழுக்காடாகவும் அதிக வளர்ச்சி கண்டு இருந்தது.
செப்டம்பர் மாத வளர்ச்சி 9.1 விழுக்காடாக இருக்கும் என்று புளூம்பெர்க் பகுப்பாய்வாளர்கள் கணித்திருந்தனர். ஆனால், அந்தக் கணிப்புப் பலிக்கவில்லை.
கணிப்பைக் காட்டிலும்ஆகக் குறைவான விகிதத்தில் வளர்ச்சி பதிவானது.
அண்மைய வளர்ச்சிக்குப் பெரிதும் கைகொடுத்தது மின்னணுவியல் மற்றும் மின்னணுவியல் சாராத பொருள்களின் ஏற்றுமதி என தரவுகள் தெரிவிக்கின்றன.
ஆயினும், மின்னணுவியல் பொருள்களின் ஏற்றுமதி விகிதம் ஆகஸ்ட் மாத 35.1 விழுக்காடு என்பதிலிருந்து குறைந்து வெறும் 4 விழுக்காடு மட்டுமே பதிவானது.
தொடர்புடைய செய்திகள்
கணினி வட்டு சாதனத் தயாரிப்புகளின் ஏற்றுமதி 64.6 விழுக்காடு வளர்ச்சியைச் சந்தித்த அதேவேளை கணினிகளின் ஏற்றுமதி 55 விழுக்காடு வளர்ந்தது.
பகுதி மின்கடத்தி என்றும் கணினி சில்லுகள் என்றும் அழைக்கப்படும் ஐசி (IC) ஏற்றுமதி 4.8 விழுக்காடு என்னும் சிறிய வளர்ச்சியைக் கண்டது.
அதேபோல, மின்னணுவற்ற தயாரிப்புகளின் ஏற்றுமதி 2.3 விழுக்காடு அதிகரித்தது. அதற்கு முந்திய மாதத்தில் அந்த வளர்ச்சி 3.6 விழுக்காடாக இருந்தது.
மருந்தியல் துறை தயாரிப்புகளின் வளர்ச்சி 35 விழுக்காடாகவும் தனித்துவமிக்க இயந்திரங்களின் ஏற்றுமதி வளர்ச்சி 12.9 விழுக்காடாகவும் இதர சிறப்பு ரசாயனப் பொருள்களின் ஏற்றுமதி 46.2 விழுக்காடாகவும் பதிவாயின.
இந்த விவரங்களை எண்டர்பிரைஸ் சிங்கப்பூர் அமைப்பு தனது அறிக்கையில் குறிப்பிட்டு உள்ளது.
உலகின் தலைசிறந்த சந்தைகளுக்கான சிங்கப்பூரின் ஏற்றுமதி ஒட்டுமொத்தமாக வளர்ந்திருந்தபோதிலும் அமெரிக்கா, ஹாங்காங், ஜப்பான் மற்றும் சீனாவுக்கான ஏற்றுமதியில் வீழ்ச்சி பதிவானதாகவும் அது தெரிவித்தது.
ஏற்றுமதிக்குப் பெரிதும் துணைபுரிந்த உலக வட்டாரப் பட்டியலில் ஐரோப்பிய ஒன்றியம் 27, இந்தோனீசியா மற்றும் தென்கொரியா ஆகியன அடுத்தடுத்து உள்ளன.