ஐமெசேஜ் வழி விரைவு அஞ்சல் சேவை மோசடி

ஐமெசேஜ் வழி விரைவு அஞ்சல் சேவை மோசடி

படம்: சிங்கப்பூர் காவல்துறை

04 Nov 2026 - 12:30 pm

2 mins read

ஆப்பிள் ஐமெசேஜ் செயலி வழியாக விரைவு அஞ்சல் சேவை நிறுவனங்களின் பெயரில் செய்தி வந்தால் பொதுமக்கள் மிகுந்த விழிப்புடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

விரைவு அஞ்சல் சேவை நிறுவனங்களின் பெயர்களைப் போலியாகப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் மோசடி அதிகரித்துவருவது குறித்து காவல்துறை செவ்வாய்க்கிழமையன்று (நவம்பர் 3) விடுத்துள்ள அறிக்கையில் எச்சரித்துள்ளது.

இந்த வகை மோசடியில், ‘டிராக்ஸ் லோஜிஸ்’, ‘யூபார்சல்’, ‘பார்க் என் பார்சல்’ போன்ற அங்கீகரிக்கப்பட்ட விரைவு அஞ்சல் சேவை நிறுவனங்களின் பெயர்களைப் பயன்படுத்தி, பாதிக்கப்பட்டவர்களுக்கு ஐமெசேஜ் மூலம் குறுஞ்செய்திகள் அனுப்பப்படுகின்றன.

இத்தகைய குறுஞ்செய்திகள் கம்போடியா (+855), வியட்னாம் (+84), வட அமெரிக்கா (+1), பிலிப்பீன்ஸ் (+63) உள்ளிட்ட வெளிநாட்டு அழைப்புக் குறியீடுகளைக் கொண்ட எண்களிலிருந்தோ அல்லது எழுத்துகளும் எண்களும் கலந்த தொடர்பற்ற முகவரிகளிலிருந்தோ வருகின்றன.

தவறான முகவரி காரணமாகப் பொட்டலம் விநியோகிக்கப்படவில்லை என்று அந்தச் செய்திகளில் தெரிவிக்கப்பட்டிருக்கும். மேலும், விரைவு அஞ்சல் சேவை நிறுவனத்தின் அதிகாரத்துவ இணைய முகவரியைப் போலவே தோற்றமளிக்கும் இணைப்பைப் பயன்படுத்தி மாலை 6 மணிக்குள் அல்லது 12 முதல் 24 மணி நேரத்திற்குள் முகவரியைப் புதுப்பிக்குமாறு பெறுநர்கள் வற்புறுத்தப்படுகின்றனர்.

சில நேரங்களில், இந்த மோசடிச் செய்திகளில் சம்பந்தப்பட்ட விரைவு அஞ்சல் சேவை நிறுவனத்தின் உண்மையான வாடிக்கையாளர் சேவை எண்ணும் இடம்பெற்றிருப்பதுண்டு. மேலும் சில செய்திகளில், இணையப்பக்க இணைப்பைப் பெறுவதற்குப் பதிலாக ‘ஒய்’ என்று குறுஞ்செய்தி அனுப்புமாறு கேட்கப்படுகிறது.

அந்த இணைப்பைத் திறக்கும்போது, விரைவு அஞ்சல் சேவை நிறுவனத்தின் அதிகாரத்துவ இணையத்தளத்தைப் போலவே வடிவமைக்கப்பட்ட போலி இணையப்பக்கத்துக்குப் பயனாளர்கள் வழிநடத்தப்படுகிறார்கள். அங்கு, மீண்டும் விநியோகிப்பதற்கான சேவைக் கட்டணம் என்ற பெயரில் ஒரு சிறிய தொகையைச் செலுத்துமாறு அறிவுறுத்தப்படுகிறது.

அதனைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்டவர்களிடம் அவர்களுடைய வங்கி விவரங்களும் ஒருமுறை மறைச்சொல்லும் பெறப்படுகின்றன. தங்களது வங்கிக் கணக்குகளிலோ அல்லது கடன் பற்று அட்டைகளிலோ அனுமதியற்ற பணப் பரிவர்த்தனைகள் நடந்திருப்பது தெரியவரும்போதுதான் தாங்கள் ஏமாற்றப்பட்டதை அவர்கள் உணர்கிறார்கள்.

பொதுமக்கள் இத்தகைய ஐமெசேஜ் குறுஞ்செய்திகளுக்குப் பதிலளிக்க வேண்டாம் என்று காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.

குறிப்புச் சொற்கள்