சிலேத்தார் விரைவுச்சாலையில் சனிக்கிழமை (அக்டோபர் 26) காலை சில நொடிகள் இடைவெளியில் அடுத்தடுத்து நிகழ்ந்த இரண்டு விபத்துகளில் இரு மோட்டார்சைக்கிள்களில் சென்ற மூவர் காயமுற்று, மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டனர்.
அந்த வாகனங்களுடன், இரு கார்களும் ஒரு டாக்சியும் அவ்விபத்துகளில் சம்பந்தப்பட்டிருந்ததாகக் காவல்துறை தெரிவித்தது.
புக்கிட் தீமா விரைவுச்சாலையை நோக்கிச் செல்லும் சிலேத்தார் விரைவுச்சாலையில், டர்ஃப் கிளப் அவென்யூவிற்கு முன்னதாகக் காலை 9.30 மணியளவில் அவ்விபத்து நேர்ந்ததாகக் கூறப்பட்டது.
மோட்டார்சைக்கிள்களை ஓட்டிச் சென்ற 29 மற்றும் 31 வயது ஆடவர்களும் ஒரு மோட்டார்சைக்கிளின் பின்னால் அமர்ந்து சென்ற 40 வயதுப் பெண்ணும் சுயநினைவுடன் உட்லண்ட்ஸ் சுகாதார வளாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர் என்று காவல்துறையும் சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படையும் தெரிவித்தன.
விபத்து குறித்த காணொளி எஸ்ஜி ரோடு விஜிலான்டே ஃபேஸ்புக் பக்கத்தில் பகிரப்பட்டுள்ளது.
முதலாவது சம்பவத்தில், தடம் மாற முயன்ற சாம்பல் நிற கார்மீது ஒரு மோட்டார்சைக்கிள் மோதியதைக் காண முடிகிறது.
இதனால், கீழே விழுந்த அந்த மோட்டார்சைக்கிளோட்டி காயத்துடன் சற்று நொண்டியவாறே எழுந்து செல்வதையும் அவரது வாகனம் மோதிய காரின் ஓட்டுநர், காரைவிட்டு இறங்கி வருவதையும் காணொளி காட்டியது.
அதனைத் தொடர்ந்து, அங்கு போக்குவரத்து சற்று நிறுத்தப்பட, இருவர் சென்ற மோட்டார்சைக்கிள்மீது இன்னொரு கார் மோதியதும் அதில் அவ்விருவரும் தூக்கி வீசப்பட்டதும் காணொளியில் பதிவாகியுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
இந்தத் தொடர் விபத்துகள் குறித்து காவல்துறை விசாரித்து வருகிறது.