வீடுகளுக்கான வாடகைதாரர் வரம்புத் தளர்வு 2028 வரை நீட்டிப்பு

2 mins read
2e53a729-9e19-4d10-95e4-2f3eec28a877
குடியிருப்பு வாடகைதாரர் வரம்பு விதிமுறைத் தளர்வு கடந்த 2024 ஜனவரி 22ஆம் தேதி அறிமுகப்படுத்தப்பட்டது. - படம்: பிஸ்னஸ் டைம்ஸ்

பெரிய வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீடுகளிலும் தனியார் வீடுகளிலும் தங்கியிருப்போர் எண்ணிக்கை தற்காலிகமாக அதிகரிக்கப்பட்டிருப்பது மேலும் ஈராண்டுகளுக்கு நீட்டிக்கப்படும்.

வீடுகளை வாடகைக்கு விடத் திட்டமிட்டுள்ள குடும்பங்களுக்கு ஆதரவளிக்கும் நோக்கில் இந்நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

நாலறை அல்லது அதற்கும் பெரிய வீவக வீடுகளிலும் குறைந்தது 90 சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட தனியார் வீடுகளிலும் எட்டுப் பேர்வரை தங்கியிருக்க அனுமதிக்கப்படுவர். அவர்கள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களாக இருக்க வேண்டுமென்பதில்லை. இந்த விதிமுறை தளர்வு 2028 டிசம்பர் 31 வரை நடப்பிலிருக்கும்.

முன்னர் இந்த எண்ணிக்கை ஆறாக இருந்தது என்று வீவகவும் நகர மறுசீரமைப்பு ஆணையமும் வெள்ளிக்கிழமை (ஜனவரி 16) வெளியிட்ட ஒரு கூட்டறிக்கை தெரிவித்தது.

கடந்த 2024 ஜனவரி 22ஆம் தேதி அறிமுகப்படுத்தப்பட்ட வாடகைதாரர் வரம்பு விதிமுறைத் தளர்வானது, தொடக்கத்தில் 2026 டிசம்பர் 31ஆம் தேதியுடன் முடிவடைவதாக இருந்தது.

“வாடகைச் சந்தை தொடர்ந்து அணுக்கமாகக் கண்காணிக்கப்படும். 2028க்குப்பின் வாடகைதாரர் வரம்புத் தளர்வை நீட்டிப்பதற்கான தேவை குறித்து மறுஆய்வு செய்யப்படும்,” என்று தெரிவிக்கப்பட்டது.

பொது, தனியார் குடியிருப்புச் சந்தைகளைப் பொறுத்தமட்டில் கடந்த 2023 முதல் 2025 வரை கிட்டத்தட்ட 100,000 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுவிட்டன. இவ்வாண்டில் மேலும் 21,000 வீடுகள் கட்டப்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

சென்ற ஆண்டில் 91,273 தனியார் வீடுகளும் 39,054 வீவக வீடுகளும் வாடகைக்கு விடப்பட்டிருந்ததாக ஹட்டன்ஸ் நிறுவனம் மதிப்பிட்டுள்ளது. இந்த விகிதங்கள் முறையே முந்திய 2024ஆம் ஆண்டைவிட 3.1 விழுக்காடும் 6.5 விழுக்காடும் அதிகம்.

ஆயினும், 2025ல் 4,544 தனியார் வீடுகளே கட்டப்பட்டன. அதே நேரத்தில், கிட்டத்தட்ட 8,000 வீடுகள் குறைந்தபட்ச குடியிருப்புத் தகுதிக் காலத்தை நிறைவுசெய்தன. இது 2024ஆம் ஆண்டைவிடக் குறைவு.

வீவக வீட்டு உரிமையாளர்களும் வீவக வணிகச் சொத்து உரிமையாளர்களும், குடியிருக்க வாடகைக்கு விடுமுன் வீவகவிடம் ஒப்புதல் பெற வேண்டும்.

வீவக வீடுகளை அல்லது படுக்கையறைகளை வாடகைக்கு விட விரும்புவோர் அதற்கு வீவக மின்சேவைகள் வழியாக விண்ணப்பம் செய்ய வேண்டும். அதுபோல், வீவக வணிகச் சொத்து உரிமையாளர்களும் குத்தகைதாரர்களும் கோபிஸ்னஸ் தளம் வழியாக விண்ணப்பம் செய்யலாம்.

குறிப்புச் சொற்கள்