தீபாவளியை முன்னிட்டு குறிப்பிட்ட சில பேருந்து, ரயில் சேவைகளின் இயக்க நேரம் அக்டோபர் 30ஆம் தேதி நீட்டிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து நிறுவனமான எஸ்பிஎஸ் டிரான்சிட் அக்டோபர் 16ஆம் தேதி தெரிவித்தது.
இது குறித்து அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வடகிழக்கு ரயில் பாதை, டௌண்டவுன் ரயில் பாதை ஆகிய வழிகளில் செல்லும் ரயில்களின் சேவை கிட்டத்தட்ட அரை மணி நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளதாகக் கூறியது.
வடகிழக்கு ரயில் பாதையில், பொங்கோல் நோக்கிச் செல்லும் கடைசி ரயில் ஹார்பர் ஃபிரண்ட் நிலையத்தில் இருந்து பின்னிரவு 12.30 மணிக்குப் புறப்படும். அதேநேரம், டௌண்டவுன் ரயில் பாதையில் புக்கிட் பாஞ்சாங் நோக்கி இயங்கக்கூடிய கடைசி ரயில் எக்ஸ்போ நிலையத்தில் இருந்து பின்னிரவு 12.04 மணிக்கும் புறப்படும்.
செங்காங் -பொங்கோல் இடையே இயங்கும் எல்ஆர்டி சேவையும் வடகிழக்கு ரயில் பாதையில் இயங்கும் கடைசி ரயில் செங்காங், பொங்கோல் ஆகிய இரு பெருவிரைவு ரயில் நிலையங்களுக்கு வரும் வரை இயக்கப்படும்.
பேருந்து சேவைகள்
பேருந்து சேவைகளைப் பொறுத்தமட்டில், தேர்ந்தெடுக்கப்பட்ட 17 எஸ்பிஎஸ் டிரான்சிட் பேருந்து சேவைகளின் இயக்க நேரம் அக்டோபர் 30 ஆம் தேதி நீட்டிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.
60A, 63M, 114A, 222, 225G, 228, 229, 232, 238, 291, 292, 293, 315, 325, 410W, 804, 812 ஆகிய பேருந்து சேவைகள் அதில் அடங்கும்.