முன்னணி எரிபொருள் நிறுவனமான எக்சான்மோபில் சிங்கப்பூரிலுள்ள தனது பெட்ரோல் நிலையங்களை விற்பது குறித்துப் பரிசீலித்து வருவதாகத் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
எரிபொருள் நிலையங்கள் விற்பனை தொடர்பில் எக்சான் நிறுவனம் நிதி ஆலோசகர்களுடன் இணைந்து செயல்பட்டு வருவதாகவும் அவற்றை வாங்க மற்ற எண்ணெய் நிறுவனங்களும் முதலீட்டு நிறுவனங்களும் ஆர்வங்காட்டுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
சிங்கப்பூரிலுள்ள தனது எரிபொருள் நிலையங்களை விற்பதன்மூலம் எக்சான் நிறுவனம் ஒரு பில்லியன் அமெரிக்க டாலர் (S$1.35 பில்லியன்) நிதி திரட்டக்கூடும். அதிக வளர்ச்சி வாய்ப்புள்ள வேறு துறைகளில் அப்பணத்தை அந்நிறுவனம் முதலீடு செய்யலாம் என்றும் சொல்லப்படுகிறது.
ஆயினும், எரிபொருள் நிலையங்களை விற்பது இன்னும் பரிசீலனை அளவிலேயே உள்ளது என்றும் இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என்றும் விவரமறிந்தவர்கள் கூறியதாக ‘புளூம்பெர்க்’ செய்தி தெரிவிக்கிறது.
இதுகுறித்துக் கருத்துரைக்க எக்சான் பேராளர் ஒருவர் மறுத்துவிட்டதாகவும் அச்செய்தி கூறியது.
கடந்த 130 ஆண்டுகளுக்கும் மேலாகச் சிங்கப்பூரில் செயல்பட்டு வரும் எக்சான், ‘எஸ்ஸோ’ பெயரில் இங்கு 59 எரிபொருள் நிலையங்களை நடத்தி வருகிறது.
சிங்கப்பூரில் எக்சான் நிறுவனத்திற்கு எண்ணெய்ச் சுத்திகரிப்பு, வேதி, உயவு எண்ணெய் (lubricant) ஆலைகளும், எரிபொருள் முனையம் ஒன்றும், திரவநிலை இயற்கை எரிவாயு நிரப்பு ஆலை ஒன்றும் உள்ளன.


