ஆர்ச்சர்ட் சாலையில் அதிரவைத்த எஃப்1 கார் பந்தயம்

ஆர்ச்சர்ட் சாலையில் அதிரவைத்த எஃப்1 கார் பந்தயம்

2 mins read
a2ee803a-15e9-4ff4-82a8-11b02d9183e1
கே-பாப் இசைக்குழுவான ‘பேபிமானிஸ்டர்’ முன்னிலையில் நடைபெற்ற கொடியசைப்பு விழாவைத் தொடர்ந்து மெர்சிடிஸ் ஏஎம்ஜி பெட்ரோனாஸ் எஃப்1 அணியின் மாற்று ஓட்டுநர் ஃபிரெட் வெஸ்டி ஆர்சர்ட் ரோட்டில் ஃபார்முலா 1 பந்தய காரை ஓட்டினார். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
Google News Preferred Icon

ஃபிரெட் வெஸ்டி ஆர்ச்சர்ட் ரோட்டில் ஃபார்முலா ஒன் காரை ஓட்டுவதற்கு ஒரு நாளுக்கு முன்பு, அவரது இலக்கு மிகவும் எளிமையானதாக இருந்தது. முடிந்தவரை அதிக புகையையும் சத்தத்தையும் எழுப்ப வேண்டும்.

மெர்சிடிஸ் எஃப்1 அணியின் மாற்று ஓட்டுநரான அவர், சொன்னபடியே செய்து காட்டினார். எட்டு முறை எஃப்1 வெற்றியாளர் பட்டம் வென்ற மெர்சிடிஸ் அணி 2013ஆம் ஆண்டுப் பருவத்தில் பயன்படுத்திய டபிள்யூ 04 காரில் நேரடி சாகசங்களைச் செய்து ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 30) கூடியிருந்த ஆயிரக்கணக்கான ரசிகர்களை உற்சாகப்படுத்தினார்.

அடிடாஸ் விளையாட்டு ஆடை நிறுவனம் ஏற்பாடு செய்திருந்த இரண்டு நாள் நிகழ்வான ‘ஆர்சர்ட் இக்னிஷன்’ அங்கமாக, 24 வயதான அவர் பெராகான் முதல் டங் பிளாசாவில் உள்ள டங்ஸ் வரையிலான 600 மீட்டர் தூரத்திற்குக் காரை வேகமாக ஓட்டிச் சென்றபோது, வி8 இயந்திரத்தின் காதை அடைக்கும் சத்தம் காற்றில் அதிர்ந்தது.

மேலும், காரை தொடர்ந்து வட்டப் பாதையில் சுழற்றி “டோனட்ஸ்” சாகசங்களைச் செய்து ரசிகர்களை அவர் மகிழ்வித்தார்.

ரசிகர்களின் ஆதரவிற்கு நன்றி தெரிவித்த டென்மார்க் ஓட்டுநர் ஃபிரெட் வெஸ்டி, “எனது ரசிகர்கள் மட்டுமல்ல, மெர்சிடிஸ் ரசிகர்கள், இங்குள்ள அனைத்து ரசிகர்களும் அற்புதமாக ஆதரவு அளித்தனர். நான் அதை மிகவும் ரசித்தேன். நேற்றும் ஆயிரக்கணக்கான ரசிகர்களைப் பார்த்தோம், இன்றைக்கும் அனைத்து இடங்களும் நிரம்பி வழிந்தன. ரசிகர்களுக்கு ஒரு சிறந்த அனுபவத்தைக் கொடுக்க என்னால் முடிந்த அனைத்தையும் செய்தேன், இந்த கார் மிகவும் அற்புதமானது,” என்றார்.

பிற்பகல் 3 மணிக்குத் தொடங்கவிருந்த நிகழ்வை மிகச் சிறந்த கோணத்தில் காண்பதற்காகச் சில ரசிகர்கள் ஒரு மணி நேரத்திற்கு முன்பே கூடினர்.

அவர்களில் ஒருவரான பொறியாளர் ஜோஷுவா லிம், புகைப்படங்கள் எடுக்க நல்ல இடத்தைப் பிடிப்பதற்காக மதியம் 2 மணிக்கே வந்துவிட்டார்.

ஹைப்ரிட் வி6 இயந்திரங்களுக்கு மாறுவதற்கு முன், 2013ல் கடைசியாக எஃப்1 தொடரில் பயன்படுத்தப்பட்ட இந்த வி8 இயந்திரம் காரைப் பார்க்க இந்த எஃப்1 ரசிகர் மிகவும் ஆர்வமாக இருந்தார்.

அடிடாஸின் உலகளாவிய கூட்டாளியும் கே-பாப் பெண் இசைக்குழுவுமான ‘பேபிமானிஸ்டர்’ உறுப்பினர்களை, மெர்சிடிஸ்-ஏஎம்ஜி காரில் ஏற்றி அதிவேகத்தில் சுற்றி வந்தார் வெஸ்டி.

குறிப்புச் சொற்கள்