பெருஞ்செல்வந்தரும் ஃபேஸ்புக்கின் இணை நிறுவனருமான எட்வார்டோ சேவரினின் குடும்பத்தார், சிங்கப்பூர் அமெரிக்கப் பள்ளிக்கு $20 மில்லியன் நன்கொடை வழங்கியதாக அந்தக் கல்வி நிலையம் தெரிவித்துள்ளது.
நிலையத்தின் வரலாற்றில் பெறப்பட்ட ஆகப் பெரிய நன்கொடைத் தொகை இது என்று அது குறிப்பிட்டது.
அந்தக் கல்வி நிலையத்தில் பாலர் பள்ளிக்கு முந்திய நிலையில் உள்ள குழந்தைகள் முதல் உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் வரையிலானோர் பயில்கின்றனர்.
இந்த நன்கொடை, கல்வி நிலையத்தை உருமாற்றும் வகையிலான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நிலையத்தின் மேற்பார்வையாளர் டாம் போஸ்பெர்க், செப்டம்பர் 20ஆம் தேதி அனுப்பிய வாராந்தர மின்னஞ்சலில் குறிப்பிட்டுள்ளார்.
புதிய ஆரம்பப் பள்ளிக்கான கட்டுமானம் நடைபெறுவதாகக் கூறிய அவர், சேவரின் குடும்பத்தினர் வழங்கியுள்ள நன்கொடை, உலகத் தரம் வாய்ந்த விளையாட்டு இடங்கள், நவீன அறிவியல், தொழில்நுட்ப, பொறியியல், கணித ஆய்வுக்கூடங்கள் உள்ளிட்ட இதர மேம்பாடுகளுக்குப் பயன்படும் என்றார்.
திரு சேவரினின் மனைவி திருவாட்டி இலெய்ன் சேவரின், இந்த நன்கொடை பள்ளி தொடர்பான தங்கள் குடும்பத்தின் கடப்பாட்டைத் தெரிவிப்பதாகக் கூறினார் என்று கல்வி நிலையம் தெரிவித்தது.
பிரேசிலின் பணக்காரக் குடும்பத்தைச் சேர்ந்த 42 வயது சேவரின், 2009ஆம் ஆண்டு சிங்கப்பூருக்குக் குடிபெயர்ந்தார். 2011ஆம் ஆண்டு அவர் தமது அமெரிக்கக் குடியுரிமையைத் துறந்தார். அவரது சொத்து மதிப்பு 30.5 பில்லியன் அமெரிக்க டாலர் (39.4 பில்லியன் வெள்ளி) என்று மதிப்பிடப்பட்டுள்ளதாக புளூம்பெர்க் தகவல் கூறுகிறது.
சிங்கப்பூர் அமெரிக்கப் பள்ளி 1956ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. அதன் உட்லண்ட்ஸ் வளாகம் ஏறக்குறைய 4,000 மாணவர்கள் பயில்வதற்கு ஏற்றது. அதில் பயில, ஓர் ஆண்டுக்கான கட்டணம் ஏறத்தாழ 49,000 வெள்ளி. போக்குவரத்து, வரி, இதர கட்டணங்கள் தனி என்று கூறப்பட்டது.


