மார்ச் 31 முதல் உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியில் முக அங்கீகார முறை

20 விநாடிகளில் குடிநுழைவுச் சோதனையை விரைந்து முடிக்கலாம்

மார்ச் 31 முதல் உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியில் முக அங்கீகார முறை

2 mins read
ca85b206-16fd-478d-9299-51c502c50830
முக அடையாளத்தைப் பயன்படுத்தி குடிநுழைவுச் சோதனையைக் கடக்கும் முறை குறித்து வியாழக்கிழமை (மார்ச் 26) செயல்முறை விளக்கம் அளிக்கப்பட்டது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியில் மார்ச் 31ஆம் தேதி முதல் மோட்டார்சைக்கிளோட்டிகளுக்கு புதிய முக அடையாள அங்கீகார முறை அறிமுகப்படுத்தப்படுகிறது.

மோட்டார்சைக்கிள் ஓட்டுநர்களும் அவர்களுக்குப் பின்னால் அமர்ந்து செல்பவர்களும் முகத்தை மட்டும் காட்டி, கடவுச்சீட்டைக் காண்பிக்காமல் 20 விநாடிகளில் குடிநுழைவுச் சோதனையை முடிக்கலாம்.

தற்போது மோட்டார்சைக்கிளோட்டி ஒருவர் குடிநுழைவுச் சோதனையை முடிக்க கிட்டத்தட்ட 35 விநாடிகள் ஆகிறது.

முதற்கட்டமாக உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியின் வருகைப் பகுதியில் உள்ள 18 தானியங்கிப் பாதைகளில் இச்சேவை இடம்பெறும்.

முதன்மை பயோமெட்ரிக் அங்கீகார முறையாக, விரல் ரேகைக்குப் பதிலாக முக அடையாள அங்கீகார முறை படிப்படியாக நடப்புக்கு வரும்.
முதன்மை பயோமெட்ரிக் அங்கீகார முறையாக, விரல் ரேகைக்குப் பதிலாக முக அடையாள அங்கீகார முறை படிப்படியாக நடப்புக்கு வரும். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடி பயணிகளுக்குத் தடையற்ற பயண அனுபவம்

முகத்தை மூடாத தலைக்கவசம் அணிந்திருப்பவர்கள் கேமராவைப் பார்த்தாலே போதும். முழுமையான தலைக்கவசம், முகக்கவசம், கறுப்புக் கண்ணாடி அணிந்திருப்பவர்கள் முக அங்கீகாரத்தின்போது அவற்றை அகற்ற வேண்டும்.

சிங்கப்பூருக்குள் நுழையும் மோட்டார் சைக்கிளோட்டிகளின் குடிநுழைவுப் பதிவுக்கு முதன்மை பயோமெட்ரிக் அங்கீகார முறையாக, விரல் ரேகைக்குப் பதிலாக முக அடையாள அங்கீகார முறை படிப்படியாக நடப்புக்கு வரும்.

குடிநுழைவு அனுமதி சோதனையை பாதுகாப்பாகவும் விரைவாகவும் தொடுதல் அற்றதாகவும் ஆக்கும் புதிய குடிநுழைவு அனுமதி முறையின் ஒரு பகுதி என்று குடிநுழைவுச் சோதனைச் சாவடிகள் ஆணையம் குறிப்பிட்டுள்ளது.

மழைக்காலங்களில் கைரேகையைப் பதிவு செய்வதில் ஏற்படும் சிரமங்களைத் தவிர்க்க இந்தத் தொழில்நுட்பம் பெரிதும் உதவும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஜனவரி மாதம் முதல் நடத்தப்பட்ட சோதனையில் 150,000க்கும் அதிகமான மோட்டார்சைக்கிளோட்டிகள் பங்கேற்றுள்ளனர்.

உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியில் மோட்டார்சைக்கிளோட்டிகள், அவர்களுக்குப் பின்னால் அமர்ந்து செல்பவர்களுக்கான முக அங்கீகார குடிநுழைவுச் சோதனை இயந்திரம்.
உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியில் மோட்டார்சைக்கிளோட்டிகள், அவர்களுக்குப் பின்னால் அமர்ந்து செல்பவர்களுக்கான முக அங்கீகார குடிநுழைவுச் சோதனை இயந்திரம். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

துவாசிலும் அறிமுகமாகிறது

உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியில் உள்ள அனைத்து 70 தானியங்கிப் பாதைகளுக்கும் இத்திட்டம் படிப்படியாக விரிவுபடுத்தப்படும். இந்த ஆண்டின் மூன்றாம் காலாண்டில் துவாஸ் சோதனைச் சாவடியிலும் இம்முறை அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பயணிகள் தங்களின் கடவுச்சீட்டு அல்லது MyICA செயலி மூலம் உருவாக்கப்பட்ட க்யூஆர் குறியீட்டை வருடி தடையைக் கடக்கலாம். அடையாளச் சரிபார்ப்பு முடிந்ததும் வெளியேறும் கதவு தானாகத் திறக்கும். கூடுதல் சரிபார்ப்பிற்காகப் பயணிகள் தங்கள் கடவுச்சீட்டை உடன் வைத்திருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

விரைவான பயணத்திற்கான க்யூஆர் குறியீடு முறை

சிங்கப்பூரின் நில எல்லைச் சோதனைச் சாவடிகளில் க்யூஆர் குறியீடு மூலம் குடிநுழைவுச் சோதனையை மேற்கொள்ளும் முறை 2025 ஆண்டு ஜனவரி மாதம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட்டது. இது குடிநுழைவு அனுமதியை விரைவுபடுத்தியருப்பதுடன், நாளுக்கு நாள் அதிகரித்து வரும் பயணிகளின் எண்ணிக்கையைச் சிறப்பாகக் கையாளவும் உதவுகிறது.

மார்ச் 15ஆம் தேதி நிலவரப்படி, சிங்கப்பூரின் நில எல்லைகளைக் கடக்கும் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்களில் கிட்டத்தட்ட 62 விழுக்காட்டினர் ஏற்கெனவே இந்த க்யூஆர் குறியீடு முறையைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர். அதிகமான பயணிகள் இந்த முறையைப் பின்பற்றுவதன் மூலம், சோதனைச் சாவடிகளில் ஒட்டுமொத்தப் போக்குவரத்து வேகம் அதிகரித்து, நெரிசல் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்புச் சொற்கள்