மோட்டார் சைக்கிளோட்டிகள் முக அடையாளத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி விரைந்து உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியில் சோதனைகளை மேற்கொள்ள முடியும்.
இந்தப் புதிய தொழில்நுட்பம் உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியின் வருகைப் பகுதியில் உள்ள இரு மோட்டார் சைக்கிள் பாதைகளில் பரிசோதிக்கப்படும் என்று குடிநுழைவு சோதனைச் சாவடி ஆணையம் திங்கட்கிழமை (ஜனவரி 26) வெளியிட்ட ஃபேஸ்புக் பதிவில் தெரிவித்தது.
திங்கட்கிழமை தொடங்கிய இந்தச் சோதனையில், சிங்கப்பூருக்குள் நுழையும் மோட்டார் சைக்கிளோட்டிகள் குடிநுழைவுப் பதிவுக்கு கைரேகையைப் பதிவு செய்வதற்குப் பதிலாக முக அடையாளத்தைப் பயன்படுத்தலாம்.
“இந்த வசதி, எல்லைப் பாதுகாப்பைப் பேணும் அதேவேளையில், குடிநுழைவுச் சோதனையை அனுமதியை விரைவாகவும் வசதியாகவும் ஆக்குவதை நோக்கமாகக் கொண்டது,” என்று ஆணையம் குறிப்பிட்டுள்ளது.
சிங்கப்பூர் குடியிருப்பாளர்கள், நீண்டகால அனுமதி அட்டை வைத்திருப்பவர்கள், முன்னதாக சிங்கப்பூருக்குள் வந்திருக்கும் வெளிநாட்டு வருகையாளர்கள் இச்சோதனைக்காக முன்கூட்டிய சரிபார்ப்பு எதுவும் செய்ய வேண்டியதில்லை.
குறிப்பிட்ட மோட்டார்சைக்கிளுக்கான வழித்தடங்களில் அறிவிப்புகள் வைக்கப்படும் என்றும் பரிசோதனைக் காலத்தில் மோட்டார் சைக்கிளோட்டிகளுக்கு உதவ அதிகாரிகள் தயார் நிலையில் இருப்பார்கள் என்றும் ஆணையம் கூறியது.
முக அடையாள முறையைப் பயன்படுத்த, ஓட்டுநர்கள் MyICA கைப்பேசி செயலியில் உள்ள க்யூஆர் குறியீடு அல்லது கடப்பிதழை ஸ்கேன் செய்ய வேண்டும். முக அடையாளச் சோதனைக்கு கேமராவைப் பார்ப்பதற்கு முன்பு, தலைக்கவசங்களை மேலே தூக்கி, குளிர் கண்ணாடி அணிந்திருந்தால் நீக்க வேண்டும்.
பரிசோதனைக் காலம் அந்த காலகட்டத்தில் பெறப்பட்ட கருத்துகளைப் பொறுத்து இருக்கும் என்று ஆணையம் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் கூறியது.

