ஜூரோங்-கிளமெண்டியில் புதிய அறிவியல் நிலையம், புதிய பலதுறை மருந்தகங்கள் ஆகியவற்றை அடுத்த ஐந்தாண்டுகளில் எதிர்பார்க்கலாம்.
விரிவுபடுத்தப்பட்ட மிதிவண்டிப் பாதைகளும் ஜூரோங் ஈஸ்ட் ஒருங்கிணைந்த போக்குவரத்து மையமும் அங்கு உருவாக்கப்படும்.
நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற அமைச்சரும் ஜூரோங் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான திருவாட்டி கிரேஸ் ஃபூ, ஜூரோங்-கிளமெண்டிக்கான புதிய ஐந்தாண்டுத் திட்டத்தில் அந்த விவரங்களை அறிவித்தார்.
கேனபி@ஜே லிங்கில் சனிக்கிழமை (ஏப்ரல் 5) நடைபெற்ற ஜூரோங்-கிளமெண்டி நகர மன்ற ஐந்தாண்டு பெருந்திட்டக் கண்காட்சியில் பொதுத் தேர்தலை முன்னிட்டு மக்கள் செயல் கட்சியின் இரண்டு புதிய தொண்டூழியர்களைத் திருவாட்டி ஃபூ அறிமுகப்படுத்தினார்.
அவர்களில் ஒருவர் முன்னாள் ஆசிரியர் டேவிட் ஹோ. மற்றொருவர் 16 ஆண்டுகளுக்கு முன் யூஹுவா வட்டாரத்தில் தொண்டூழியம் செய்யத் தொடங்கிய கசேண்ட்ரா லீ.
2026லிருந்து 2030ஆம் ஆண்டு வரைக்குமான பெருந்திட்டத்தில் 9 பழைய பேட்டைகள் புதுப்பொலிவு பெறும். யுஹுவா பகுதியில் ‘ஸ்போர்ட்ஸ் - இன் - பிரிசின்ட்’ என்ற திட்டமும் அறிமுகம் காணும்.
திட்டத்தின் ஓர் அம்சமாக 40க்கும் அதிகமான கூரையுடன் கூடிய நடைப்பாதைகளும் அமைக்கப்படும். பல இடங்களில் உள்ள 41 உடற்பயிற்சி வசதிகளும் 30 விளையாட்டு இடங்களும் மேம்படுத்தப்படும்.
ஒட்டுமொத்தத்தில் குடியிருப்பாளர்கள் 200க்கும் அதிகமான மேம்பாட்டுத் திட்டங்களை அடுத்த ஐந்தாண்டுகளில் எதிர்பார்க்கலாம் என்று அமைச்சர் ஃபூ குறிப்பிட்டார்.
தொடர்புடைய செய்திகள்
ஜூரோங்-கிளமெண்டி குடியிருப்பாளர்களின் ஆரோக்கியத்தையும் பாதுகாப்பையும் உறுதிப்படுத்த புதிய பங்காளித்துவ ஒப்பந்தம் கையெழுத்தானது.
இங் தெங் ஃபோங் மருத்துவமனை, ஜூரோங் சமூக மருத்துவமனை ஆகியவற்றுடன் ஜூரோங்-கிளமெண்டி நகர மன்றம் அந்த ஒப்பந்தத்தை ஏப்ரல் 5ஆம் தேதி சனிக்கிழமை செய்தது.
இதன்வழி ஜூரோங்-கிளமெண்டி குடியிருப்புப் பேட்டைகளில் புதிதாக வரவுள்ள சமூக உடற்பயிற்சி நிலையங்கள் உடலில் பலம் குன்றியவர்களை மனதில் கொண்டு கட்டப்படும். குறிப்பாக, மூத்தோர், உடலில் பலம் குன்றியோருக்கு உடற்பயிற்சிக் கருவிகளைச் சரியாகப் பயன்படுத்த வழிகாட்டுதல் வழங்கப்படும்.
ஆரோக்கிய வாழ்க்கை முறைக்கான பரிந்துரைகளைக் குடியிருப்பாளர்களுடன் பகிர தனித் தளம் அமைக்கப்படும்.
சென்ற ஆண்டு புக்கிட் பாத்தோக், ஜூரோங் சென்ட்ரல் ஆகியவற்றில் ஆறு மாத முன்னோட்டத் திட்டம் பரிசோதிக்கப்பட்டது.
பெருந்திட்டம் குறித்த விவரங்களைக் குடியிருப்பாளர்களிடம் பகிர ஜூரோங், கிளமெண்டி, புக்கிட் பாத்தோக் ஆகிய வட்டாரங்களில் இம்மாதம் 6, 12, 13ஆம் தேதிகளில் கண்காட்சிகள் இடம்பெறும்.