யூனோஸ் தொழிற்பேட்டையில் உலோகக் கூரை கொண்ட கட்டடம் ஒன்று நவம்பர் 1ஆம் தேதி தீப்பிடித்தது.
அக்கட்டடத்தில் பணிபுரிந்த பங்ளாதேஷ் ஊழியரான திரு ஜந்து கோஷ், தீ விபத்து நேர்ந்தபோது ஏற்பட்ட நிகழ்வுகள் குறித்து ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் நவம்பர் 2ஆம் தேதி விவரித்தார்.
தீக்கிரையான மூன்று தொழிற்சாலைகளில் திரு ஜந்து, 12 ஆண்டுகளாகப் பணிபுரிந்துவந்த ‘ஃபெஸ்ட் டோர்ஸ்’ நிறுவனத்தின் தொழிற்சாலையும் ஒன்று.
“நான் கதவுகளுக்கு வண்ணம் தீட்டிக்கொண்டிருந்தபோது திடீரென காற்றிப்போக்கியில் தீப்பொறி வருவதைக் கவனித்தேன். மளமளவென தீ வேகமாகப் பரவுவதைக் கண்டேன். உடனடியாக மற்ற ஊழியர்களுக்கு விவரத்தைத் தெரிவித்து அவர்களுடன் அவ்விடத்தைவிட்டு வெளியேறினேன்,” என அவர் கூறினார்.
தான் பணிபுரிந்த தொழிற்சாலை பத்து நிமிடங்களில் தன் கண்முன்னே தீக்கிரையானது எனக் கூறி, அவர் மிகுந்த மனவேதனை அடைந்தார்.
இதற்கிடையே, அக்கட்டடக் கட்டமைப்பின் பாதுகாப்பை உறுதிசெய்யவும் கூடுதல் சோதனைக்காகவும் அதைத் தற்காலிகமாக மூட கட்டட, கட்டுமான ஆணையம் உத்தரவிடக்கூடும்.
நவம்பர் 1ஆம் தேதி சனிக்கிழமை யூனோஸ் அவென்யூ 7ல் உள்ள 1079 என்னும் தொழிற்கூடத்தில் ஏற்பட்ட தீவிபத்து குறித்து தங்களுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டதாகத் தனது ஃபேஸ்புக் பதிவில் ஞாயிற்றுக்கிழமை ஆணையம் தெரிவித்தது.
“தீ விபத்தில் கட்டடம் மோசமாகச் சேதமடைந்துள்ளதால், விரிவான சோதனைகள் மேற்கொள்வதற்காக அதை மூட ஆணையம் முடிவுசெய்துள்ளது. அதற்கான உத்தரவு அக்கட்டடத்தின் உரிமையாளரிடம் விரைவில் வழங்கப்படும்,” என அது மேலும் கூறியது.
தொடர்புடைய செய்திகள்
எந்தவோர் ஆபத்தையும் தவிர்ப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை வழங்கவும், பாதிக்கப்பட்ட கட்டமைப்பில் சோதனைகளை மேற்கொள்ளவும், சீரமைப்புப் பணிகளைப் பரிந்துரைக்கவும் பொறியாளர் ஒருவரைக் கட்டட உரிமையாளர் நியமிக்க வேண்டும் என்றும் தனது பதிவில் ஆணையம் குறிப்பிட்டது.

