சிங்கப்பூரின் ஜூலை மாதத் தொழிற்சாலை உற்பத்தி, ஆண்டு அடிப்படையில் 1.8 விழுக்காடு வளர்ச்சி கண்டுள்ளது.
பொருளியல் வளர்ச்சிக் கழகம் ஆகஸ்ட் 26ஆம் தேதி இத்தகவலை வெளியிட்டது.
ஜூன் மாதம் தொழிற்சாலை உற்பத்தி 4.3 விழுக்காடு சரிந்ததாக அது குறிப்பிட்டது.
புளூம்பெர்க் கருத்தாய்வில் பொருளியல் வல்லுநர்கள் முன்னுரைத்ததைவிட ஜூலை மாதத் தொழிற்சாலை உற்பத்தி வளர்ச்சி அதிகமாகப் பதிவானது.
உயிர்மருத்துவத் துறையைத் தவிர்த்து இதர துறைகளில் தொழிற்சாலை உற்பத்தி 3.4 விழுக்காடு வளர்ச்சி அடைந்தது. ஜூன் மாதம் அது 2.2 விழுக்காடு சுருங்கியது.
சென்ற ஆண்டு ஜூலையுடன் ஒப்பிடுகையில் கடந்த ஜூலை மாதம், மின்னிலக்கத் துறையில் 2.8 விழுக்காட்டு வளர்ச்சி பதிவானது. ஜூன் மாதம் அது 6.7 விழுக்காடு வீழ்ச்சி அடைந்தது.
ஜூலை மாத மேம்பாட்டுக்கு, கணினிப் பொருள்கள், தரவுச் சேமிப்புப் பிரிவுகள் முக்கியக் காரணம். இத்துறைகளில் 34.9 விழுக்காட்டு வளர்ச்சி பதிவானது.
ரசாயனங்கள், துல்லியப் பொறியியல், போக்குவரத்துப் பொறியியல், பொது உற்பத்தி ஆகியவற்றிலும் உற்பத்தி குறிப்பிடத்தகுந்த அளவில் வளர்ச்சி கண்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
உயிர்மருத்துவத் துறை உற்பத்தி ஜூலை மாதத்தில் சுருங்கினாலும் ஜூன் மாதத்தைவிட உற்பத்தி சற்றே மேம்பட்டுள்ளது. ஆண்டு அடிப்படையில் ஜூலை மாத உற்பத்தி 17.4 விழுக்காடு சுருங்கியது. ஜூன் மாதம் அது 22.3 விழுக்காடாக இருந்தது.
மருத்துவக் கருவிகளின் ஏற்றுமதித் தேவை குறைவாக இருந்ததால் ஜூலை மாத மருத்துவத் தொழில்நுட்ப உற்பத்தி 1.6 விழுக்காடு குறைந்ததாகக் கழகம் கூறியது.
மருந்து உற்பத்தி ஜூலை மாதத்தில் 27.4 விழுக்காடு குறைந்ததாக அது குறிப்பிட்டது.
மாத அடிப்படையில், ஜூலை மாதத் தொழிற்சாலை உற்பத்தி 10.1 விழுக்காடு அதிகரித்தது. ஜூன் மாதத்துக்கான திருத்தப்பட்ட அளவின்படி, உற்பத்தி 4.3 விகிதம் சரிந்தது.
உயிர்மருத்துவத் துறையைத் தவிர்த்து ஏனைய துறைகளில், மாத அடிப்படையிலான உற்பத்தி ஜூலையில் 4.1 விழுக்காடு கூடியது. ஜூன் மாதம் அது 6.9 விழுக்காடாகப் பதிவானது.