சிங்கப்பூரில் குறைந்த வருமான பின்னணியைச் சேர்ந்த 126,000க்கும் அதிகமான தனிநபர்களுக்கு பழங்கள், காய்கறிகள், பால் போன்ற அத்தியாவசிய பொருள்கள் கிடைக்கவிருக்கின்றன.
ஹாவ் ரென் ஹாவ் ஷீ என்ற அறநிறுவனத்துக்கு ஃபேர்பிரைஸ் குழுமம் $3 மில்லியன் நன்கொடை வழங்குவதன் மூலம் அது சாத்தியமாகிறது.
அறநிறுவனத்தின் நடமாடும் மளிகைப் பொருள்கள், அங்காடித் திட்டத்தின்கீழ் கிட்டத்தட்ட 1,200 முறை வசதி குறைந்தோருக்கு அத்தியாவசிய பொருள்களை விநியோகம் செய்ய ஃபேர்பிரைஸ் குழுமமும் ஹாவ் ரென் ஹாவ் ஷி அறநிறுவனமும் செய்துகொண்ட மூவாண்டு பங்காளித்துவம் வழிவகுக்கிறது.
ஒவ்வொரு மாதமும் பொருள்களைப் பைகளில் எடுத்துவைக்க ஏறக்குறைய 1,000 தொண்டூழியர்கள் பணியில் ஈடுபடுத்தப்படுவர்.
குறிப்பிட்ட சமூக விநியோகத் திட்டங்களில் யுனிட்டி மருந்துக் கடையும் பங்கேற்கும்.
பயனீட்டாளர்களுக்கு சத்தான உணவும் முக்கியப் பொருள்களும் கிடைப்பதை உறுதிசெய்ய நன்கொடை வழங்கியதாக ஃபேர்பிரைஸ் குறிப்பிட்டது.
தோ பாயோ லோரோங் 1ல் உள்ள புளோக் 158ல் சனிக்கிழமை (அக்டோபர் 24), முதல் விநியோகத் திட்டம் தொடங்கியது.
அங்குக் கிட்டத்தட்ட 100 தொண்டூழியர்கள் முட்டைகள், பால், காய்கறி போன்ற பொருள்களை வசதி குறைந்தோருக்கு வழங்கினர்.
