ஃபேர்பிரைஸ் பேரங்காடிகளில் வியாழக்கிழமை (அக்டோபர் 29) முதல் நவம்பர் 9ஆம் தேதி வரை வாடிக்கையாளர்கள் செலவழிக்கும் ஒவ்வொரு $50க்கும் $5 மதிப்பிலான பற்றுச்சீட்டைப் பெற்றுக்கொள்ளலாம் என்று ஃபேர்பிரைஸ் குழுமம் அறிவித்துள்ளது.
இந்தக் காலகட்டத்தில் ஃபேர்பிரைஸ், ஃபேர்பிரைஸ் ஃபைனஸ்ட், ஃபேர்பிரைஸ் எக்ஸ்ட்ரா, யூனிட்டி மருந்தகக் கிளைகளில் ஒரே ரசீதில் செலவிடப்படும் ஒவ்வொரு $50க்கும் இந்த $5 மதிப்பிலான ஃபேர்பிரைஸ் பற்றுச்சீட்டு வழங்கப்படும்.
ஒரு பரிவர்த்தனைக்கு அதிகபட்சமாக நான்கு பற்றுச்சீட்டுகள்வரை வாடிக்கையாளர்கள் பெற முடியும். வழங்கப்படும் பற்றுச்சீட்டுகளை அனைத்து ஃபேர்பிரைஸ் பேரங்காடிகளிவலும் யூனிட்டி மருந்தகக் கடைகளிலும் பயன்படுத்தலாம். அவற்றுக்கு எவ்விதக் குறைந்தபட்ச செலவு வரம்பும் நிர்ணயிக்கப்படவில்லை.
பற்றுச்சீட்டு வழங்கப்பட்ட மறுநாளிலிருந்து நவம்பர் 30 வரை அவற்றைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாடிக்கையாளர்கள் செலவிடும் தொகையில் ஒரு பகுதியைப் பற்றுச்சீட்டுமூலம் அவர்களுக்கே திருப்பித்தரும் இந்த நடவடிக்கையை ஃபேர்பிரைஸ் செயல்படுத்துவது இவ்வாண்டில் இது ஆறாவது முறை. தீபாவளி, கிறிஸ்துமஸ் போன்ற ஆண்டிறுதிப் பண்டிகைக் காலக் கொண்டாட்டங்களுக்கு மக்கள் தயாராகிவரும் வேளையில், குடும்பங்கள் தங்களது மளிகைப் பொருள் செலவுகளைச் சமாளிப்பதற்கும் கூடுதல் சேமிப்பைப் பெறுவதற்கும் உதவும் நோக்கில் இந்த முயற்சி தொடர்வதாக ஃபேர்பிரைஸ் குழுமம் குறிப்பிட்டது.
குறைந்த வருமானக் குடும்பங்களுக்குக் கைகொடுக்கும் வகையில் நீல நிற, ஆரஞ்சு நிற சாஸ் அட்டைதாரர்களுக்கான மேம்பட்ட தள்ளுபடிச் சலுகை உள்ளிட்ட பல திட்டங்களை ஃபேர்பிரைஸ் குழுமம் இவ்வாண்டில் செயல்படுத்தி வந்துள்ளது.
அந்தத் திட்டத்தின்கீழ், கடந்த செப்டம்பர் மாதம் 3ஆம் தேதி முதல் 2027 ஜனவரி 1ஆம் தேதி வரை, குறைந்த வருமானம் ஈட்டும் சிங்கப்பூரர்கள் தாங்கள் வாங்கும் மளிகைப் பொருள்களுக்கு ஆறு விழுக்காட்டுத் தள்ளுபடியைப் பெற முடிகிறது.
இது, அதற்கு முந்தைய மூன்று விழுக்காட்டுத் தள்ளுபடியைப்போல் இருமடங்காகும்.
