ஃபேர்பிரைஸ் பேரங்காடிகளில் சமூக மேம்பாட்டு மன்றம் மற்றும் எஸ்ஜி60 பற்றுச்சீட்டுகளைப் பயன்படுத்தி ஒரே ரசீதில் $60 செலவு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் $6 திரும்பப் பெறும் பற்றுச்சீட்டுச் சலுகை நீட்டிக்கப்பட்டுள்ளது. முன்னதாக ஜூன் 17ஆம் தேதியுடன் முடிவடையவிருந்த இந்தச் சலுகை, தற்போது ஜூன் 21ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக ஃபேர்பிரைஸ் குழுமம் தெரிவித்துள்ளது.
இதன்படி, வாடிக்கையாளர்கள் ஒரு பரிவர்த்தனைக்கு அதிகபட்சமாக 20 பற்றுச்சீட்டுகள் வரை பெற முடியும். இந்தப் பற்றுச்சீட்டுகளை எவ்வித குறைந்தபட்சக் கட்டணக் கட்டுப்பாடும் இன்றி, பெற்ற அடுத்த நாள் முதல் ஜூலை 31ஆம் தேதி வரை பயன்படுத்திக் கொள்ளலாம். மத்திய கிழக்கு நெருக்கடியால் ஏற்பட்டுள்ள வாழ்க்கைச் செலவின அதிகரிப்பை எதிர்கொள்ளும் வகையில், அரசாங்கம் சமூக மேம்பாட்டு மன்றப் பற்றுச்சீட்டுகளைத் திட்டமிட்ட காலத்துக்கு ஆறு மாதங்களுக்கு முன்பாகவே வெளியிட்டது.
அதற்கு ஆதரவளிக்கும் வகையிலும் குடும்பங்களின் மளிகைப் பொருள் செலவைச் சமாளிக்க உதவும் வகையிலும் ஃபேர்பிரைஸ் இந்த நீட்டிப்புச் சலுகையை அறிவித்துள்ளது.
இதேபோல், ஜயண்ட், கோல்ட் ஸ்டோரேஜ் பேரங்காடிகளிலும் சமூக மேம்பாட்டு மன்றம் அல்லது எஸ்ஜி60 பற்றுச்சீட்டுகள் மூலம் $60 செலவழித்தால் $6 திரும்பப் பெறும் பற்றுச்சீட்டுச் சலுகை ஜூன் 17 வரை வழங்கப்படுகிறது.
பிரைம் பேரங்காடிகளிலும் சமூக மேம்பாட்டு மன்றப் பற்றுச்சீட்டுகளைப் பயன்படுத்தி $20 செலவு செய்பவர்களுக்கு ஜூன் மாதம் 18ஆம் தேதி வரை சில பொருள்கள் பாதி விலையில் வழங்கப்படுகின்றன. பொதுமக்கள் தங்கள் சமூக மேம்பாட்டு மன்றப் பற்றுச்சீட்டுகளை go.gov.sg/cdcv என்ற இணையப்பக்கத்தில் பெற்றுக்கொள்ளலாம்.

