தானியக்க வாகனங்களைச் சோதனைச் செய்யும் ஃபேர்பிரைஸ், போக்கா நிறுவனம்

தானியக்க வாகனங்களைச் சோதனைச் செய்யும் ஃபேர்பிரைஸ், போக்கா நிறுவனம்

2 mins read
e6d2e172-380f-4448-ac9b-18d74088d793
ஃபேர்பிரைஸ் குழுமம், பானங்களைக் கொண்டுசெல்ல தானியக்க வாகனங்களைச் சோதித்துவருகிறது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

ஃபேர்பிரைஸ் குழுமமும் பானங்களைத் தயாரிக்கும் போக்கா (Pokka) நிறுவனமும் தானியக்க வாகனங்களின் பயன்பாட்டைச் சோதனை செய்துவருகின்றன.

இவ்வாண்டு பிப்ரவரி 25ஆம் தேதி தானியக்க வாகனத்துக்கான ஆறுவாரச் சோதனைகளைக் குழுமமும் நிறுவனமும் தொடங்கின.

பினோய் கிரெசண்டில் உள்ள போக்காவின் கிடங்கிலிருந்து ஜூ கூன் சர்க்கலில் உள்ள ஃபேர்பிரைஸ் குழுமத்தின் விநியோக நிலையம்வரை 6 கிலோமீட்டர் வட்டப் பாதையில் தானியக்க வாகனங்கள் பானங்களைக் கொண்டுசெல்கின்றன.

ஃபேர்பிரைஸ் குழுமத்துக்குச் சொந்தமான தானியக்க வாகனம் மணிக்கு 30 கிலோமீட்டரிலிருந்து 40 கிலோமீட்டர் வேகம்வரை செல்கிறது. கிடங்கில் உள்ள நிர்வாகி ஒருவர் திறன்பேசியின் உதவியுடன் தானியக்க வாகனத்தை இயக்குகிறார்.

ஃபேர்பிரைஸ் நிறுவனத்திடம் ஆறு தானியக்க வாகனங்கள் உள்ளன. அவை வெவ்வேறு விநியோக நிலையங்களுக்குப் பொருள்களைக் கொண்டுசெல்கின்றன.

விநியோக நிலையங்களுக்கு இடையே தானியக்க வாகனங்களைப் பயன்படுத்திக்கொள்வதற்கான அனுமதியை நிலப் போக்குவரத்து ஆணையம் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஃபேர்பிரைஸ் குழுமத்துக்கு வழங்கியது.

தானியக்க வாகனங்கள் ஒவ்வொரு வாரமும் 100க்கும் அதிகமான முறை பயணம் செய்வதாக ஃபேர்பிரைஸ் குழுமம் சொன்னது. ஒவ்வொரு முறையும் அவை 1.5 டன் எடையுள்ள பொருள்களைச் சுமந்துசெல்கின்றன.

ஏப்ரல் மாதத்தில் தானியக்க வாகனங்களின் சோதனை முடியும்.
ஏப்ரல் மாதத்தில் தானியக்க வாகனங்களின் சோதனை முடியும். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சீனாவின் செலோஸ் தொழில்நுட்ப நிறுவனத்தால் தருவிக்கப்பட்ட தானியக்க வாகனங்கள் போக்கா நிறுவனத்தின் அண்மை சோதனைகளிலும் பயன்படுத்தப்படுகின்றன.

பொருள்களை உரிய இடத்தில் விநியோகம் செய்த பிறகு தானியக்க வாகனங்கள் போக்கா கிடங்கில் உள்ள பொருள்களை ஏற்றி இறக்கும் இடத்தில் நிற்கின்றன.

தானியக்க வாகனத்தைச் செலுத்த சக்கரங்களும் மனிதர்கள் அதில் அமர்வதற்கு இடமும் இல்லை. தூரத்தில் இருந்தும் அதை மற்றவர்கள் பாதுகாப்பாக இயக்க முடியும்.

ஏப்ரல் இறுதியில் சோதனை முடிந்த பிறகு நிலப் போக்குவரத்து ஆணையம் ஒப்புதல் வழங்குவது குறித்து ஆராயும். ஒப்புதல் வழங்கப்பட்டால் ஃபேர்பிரைஸ் குழுமம் போக்கா கிடங்கிலிருந்து பொருள்களைக் கொண்டுசெல்ல தானியக்க வாகனங்களை நிரந்தரமாகப் பயன்படுத்தத் தொடங்கும்.

குறிப்புச் சொற்கள்