ஃபேர்பிரைஸ், ஷெங் சியோங் பேரங்காடிகளில் ஏறக்குறைய $2.26 மில்லியனாகப் பெறப்பட்ட பிளாஸ்டிக் பை கட்டணங்கள், சிங்கப்பூரில் வெவ்வேறு அறப்பணிகளுக்கு நன்கொடையாக அளிக்கப்பட்டன.
அதிபர் சவால், வோர்ல்ட் வைட் ஃபண்ட் ஃபார் நேச்சர், இதர சமுதாய, சுற்றுச்சூழல் திட்டங்கள் உள்ளிட்டவை அவற்றில் அடங்கும்.
2023 ஜூலை 3க்கும் 2023 டிசம்பர் 31க்கும் இடைப்பட்ட காலத்தில், ஃபேர்பிரைஸ் 33,630,364 பைகளையும் ஷெங் சியோங் 15,202,129 பைகளையும் வழங்கியிருந்தன.
பிளாஸ்டிக் பை கட்டணங்களாக ஃபேர்பிரைஸ் மொத்தம் $1,681,518.20 வசூலித்தது. 2023ல் எட்டு விழுக்காடாக இருந்த பொருள், சேவை வரியைச் செலுத்திய பிறகு, எஞ்சிய $1,556,961.30 நன்கொடை அளிக்கப்பட்டது. அதில், $1 மில்லியன் ஃபேர்பிரைஸ் அறநிறுவனத்துக்கு வழங்கப்பட்டது. எஞ்சிய $556,961.30, சுற்றுச்சூழல் நீடித்த, நிலைத்தன்மை திட்டங்களுக்கு வழங்கப்பட்டது. வோர்ல்ட் வைட் ஃபண்ட் ஃபார் நேச்சர், ஸீரோ வேஸ்ட் எஸ்ஜி உள்ளிட்ட திட்டங்கள் அவற்றில் அடங்கும்.
மற்றொரு புறம், பிளாஸ்டிக் பை கட்டணங்களாக ஷெங் சியோங் மொத்தம் $760,106.45 வசூலித்தது. பொருள், சேவை வரியைக் கழித்து, எஞ்சிய தொகை அதிபர் சவால் அறப்பணிக்கு வழங்கப்பட்டது.
பெரிய பேரங்காடிகளில் பிளாஸ்டிக் பைகளுக்குக் கட்டாயமாகக் கட்டணம் விதிக்கும் நடைமுறை 2023 ஜூலை 3ஆம் தேதி நடப்புக்கு வந்தது.
ஃபேர்பிரைஸ், ஷெங் சியோங், கோல்ட் ஸ்டோரேஜ், ஜயண்ட், பிரைம் உட்பட $100 மில்லியனுக்குமேல் ஆண்டு வருவாய் ஈட்டும் பேரங்காடிகள், ஒரு பிளாஸ்டிக் பைக்கு குறைந்தபட்சம் 5 காசு கட்டணம் விதிக்க வேண்டும்.
இதனால், பேரங்காடிகளில் பிளாஸ்டிக் பை பயன்பாடு 50 முதல் 80 விழுக்காடு வரை குறைந்திருப்பதாக நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற அமைச்சர் கிரேஸ் ஃபூ இவ்வாண்டு ஜனவரியில் கூறியிருந்தார்.