சிங்கப்பூர் முழுவதும் பேரங்காடிகளை நடத்தும் பெருநிறுவனமான ஃபேர்பிரைஸ், பாதிக்கப்படக்கூடிய சிங்கப்பூரர்களுக்கான தள்ளுபடி திட்டத்தை அடுத்த ஆண்டு (2026) டிசம்பர் 31 வரை நீட்டிப்பதாக அறிவித்துள்ளது.
அதன் பேரங்காடிகளில் விற்கப்படும் அரிசி, முட்டை போன்ற அத்தியாவசியப் பொருள்களை அது தள்ளுபடி விலையில் விற்று வருகிறது. இந்தத் திட்டம் இவ்வாண்டு டிசம்பரில் முடிவடைவதாக இருந்தது. ஆனால், அந்தத் திட்டத்தை நீட்டிக்கப் போவதாக ஃபேர்பிரைஸ் கூறியுள்ளது.
இந்த நீட்டிப்பினால் குறைந்த மாத வருமானம் கொண்ட குடும்பங்களின் மூத்தோர், முன்னோடித் தலைமுறையினர், மெர்டெக்கா தலைமுறையினர், சாஸ் நீல நிற, ஆரஞ்சு நிற அட்டை வைத்திருப்பவர்களுக்குத் தள்ளுபடி கிடைக்கும்.
கடந்த 2024 அக்டோபரில் சாஸ் ஆரஞ்சு அட்டை வைத்திருப்பவர்களுக்கான தள்ளுபடி திட்டத்தை அறிமுகப்படுத்திய முதல் மற்றும் ஒரே சில்லறை விற்பனையாளர் ஃபேர்பிரைஸ் குழுமம் ஆகும்.
இந்தத் தள்ளுபடி திட்டத்துக்கு ஃபேர்பிரைஸ் குழுமத்தின் தொண்டு நிறுவனமான ஃபேர்பிரைஸ் அறக்கட்டளை நிதியளிக்கிறது. மற்ற தள்ளுபடிகள், ஃபேர்பிரைஸ் குழுமத்தால் ஈடுகட்டப்படுகிறது.
சாஸ் நீல நிற அட்டை வைத்திருப்பவர்களுக்கான தள்ளுபடி திட்டம் 2021ல் அறிமுகப்படுத்தப்பட்டது.
ஒரு குடும்பத்தில் தனி நபருக்கான மாத வருமானம் $1,501 முதல் $2,300 வரை இருந்தால் ஆரஞ்சு அட்டைக்கு விண்ணப்பிக்கத் தகுதியுடையவர்கள் ஆவர். ஒரு குடும்பத்தில் ஒரு நபருக்கான வருமானம் $1,500 மற்றும் அதற்குக் கீழே இருந்தால் நீல அட்டைக்கு விண்ணப்பிக்கலாம்.
நாளுக்கு ஒரு பரிவர்த்தனையில் S$200 வரை தள்ளுபடிகள் பெறலாம்.

