மெர்டேக்கா, முன்னோடித் தலைமுறையினருக்கான ஃபேர்பிரைஸ் விலைக்கழிவு நீட்டிப்பு

2 mins read
310421c8-74f4-4524-a5dc-066a477a8eb5
விலைக்கழிவு எல்லா நேரடி ஃபேர்பிரைஸ் கடைகளுக்கும் ‘யூனிட்டி’ மருந்துக் கடைகளுக்கும் பொருந்தும். - கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

மெர்டேக்கா, முன்னோடித் தலைமுறையினர் மற்றும் சமூக சுகாதார உதவித் திட்டத்தில் (சாஸ்) இடம்பெறும் சிலர் ஆகியோர் கூடுதல் காலத்துக்கு ஃபேர்பிரைஸ் அமைப்பு வழங்கும் விலைக்கழிவைப் பெறுவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மெர்டேக்கா, முன்னோடித் தலைமுறையினரைத் தவிர சாஸ் ஆரஞ்சு, நீல நிற அட்டைகளை வைத்திருப்போருக்கு இது பொருந்தும்.

தங்களின் எல்லா நேரடிக் கடைகளிலும் ‘யூனிட்டி’ மருந்துக் கடைகளிலும் விலைக்கழிவு 2025ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31ஆம் தேதி வரை வழங்கப்படும் என்று ஃபேர்பிரைஸ் குழுமம் வியாழக்கிழமையன்று (டிசம்பர் 19) அறிவித்தது. இதன்கீழ், மெர்டேக்கா, முன்னோடித் தலைமுறையினர் மற்றும் ஆரஞ்சு, நீல நிற சாஸ் அட்டைகளை வைத்திருப்போர் வாரந்தோறும் குறிப்பிட்ட சில நாள்களில் ஃபேர்பிரைஸ் கடைகளில் மூன்று விழுக்காடு விலைக்கழிவு பெறுவர்.

60 வயதைத் தாண்டிய சிங்கப்பூர் குடிமக்கள், நிரந்தரவாசிகளுக்கு செவ்வாய்க்கிழமைகளில் இரண்டு விழுக்காடு விலைக்கழிவு வழங்கப்படும்.

ஒவ்வொருவரும் மாதத்துக்கு 1,501லிருந்து 2,300 வெள்ளிக்குள் சம்பாதிப்போர் இருக்கும் குடும்பங்கள் ஆரஞ்சு நிற சாஸ் அட்டைக்கு விண்ணப்பிக்கத் தகுதிபெறும். அதேபோல் ஒவ்வொருவரும் மாதத்துக்கு 1,500 வெள்ளி அல்லது அதற்கும் குறைவான சம்பளம் பெறுவோர் இருக்கும் குடும்பங்கள் நீல நிற சாஸ் அட்டைக்கு விண்ணப்பிக்கத் தகுதிபெறும்.

வாடிக்கையாளர்கள் தங்களின் மின்னிலக்க அட்டைகள் அல்லது நேரடி அட்டைகளை சம்பந்தப்பட்ட கடைகளின் காசாளரிடம் சமர்ப்பித்து விலைக்கழிவைப் பெற முடியும். வாடிக்கையாளர்கள் சுயகட்டணச் சேவை முகவைகளிலும் (self-checkout counters) விலைக்கழிவைப் பெறலாம்.

ஒரு நாளில் 200 வெள்ளி வரையிலான பரிவர்த்தனைகளுக்கு விலைக்கழிவைப் பெற முடியும்.

பணவீக்கம் மெதுவடைந்து வந்தாலும் தினசரி தேவைப்படும் அத்தியாவசியப் பொருள்களை வாங்குவதில் சிங்கப்பூரர்கள் தொடர்ந்து சிரமத்தை எதிர்நோக்குவதாக ஃபேர்பிரைஸ் குழுமத்தின் தலைமை நிர்வாகி விப்புல் சாவ்லா கூறியுள்ளார்.

“சிரமத்தை எதிர்நோக்கும் வாய்ப்புகள் அதிகம் உள்ள சிங்கப்பூரர்களுக்கு எங்களால் முடிந்தவரை உதவிக்கரம் நீட்ட நாங்கள் விரும்புகிறோம். அன்றாடம் தேவைப்படும் பொருள்கள் அனைவருக்கும் கிடைக்கச் செய்யவேண்டும் என்ற எங்களின் இலக்குக்கேற்ப செயல்பட்டு அவ்வாறு செய்ய முற்படுகிறோம்,” என்று திரு விபுல் சாவ்லா சொன்னார்.

குறிப்புச் சொற்கள்