ஃபேர்பிரைஸ் குழுமத்தின் செயலி மூலம் ஆரோக்கிய உணவு வகைகளை வாங்கும்போது சுகாதார மேம்பாட்டு வாரியத்தின் சுகாதாரப் புள்ளிகளை (Healthpoints) சிங்கப்பூரர்கள் இனி இன்னும் எளிதாகப் பெறலாம்.
வாரியத்தின் ‘ஹெல்தி 365’ செயலியுடன் தன் கைப்பேசிச் செயலியை இணைக்கும் முதல் சில்லறை மளிகை விற்பனையாளர் என தன்னை ஃபேர்பிரைஸ் குழுமம் திங்கட்கிழமை (செப்டம்பர் 23) அறிவித்தது.
இதன்மூலம், ஃபேர்பிரைஸ் பேரங்காடிகள், அதன் இணைய விற்பனைத் தளம், கோப்பித்தியாம் உணவு நிலையங்கள், யூனிட்டி கடைகள் ஆகியவற்றில் பொருள் வாங்குவோர், ‘கியூஆர்’ குறியீடுகளை வருட தேவையின்றி தானாகவே சுகாதாரப் புள்ளிகளைப் பெற இந்த ஏற்பாடு வழிவகை செய்யும்.
தற்போது, ‘ஹெல்தி 365’ செயலியைப் பயன்படுத்துவோர், தகுதிபெறும் பொருள்களை வாங்கியவுடன் தோன்றும் ‘கியூஆர்’ குறியீட்டை வருடிய பிறகே சுகாதாரப் புள்ளிகளைப் பெற முடியும்.
சுகாதாரப் புள்ளிகளைப் பயன்படுத்தி, ஃபேர்பிரைஸ் போன்ற தகுதிபெறும் வணிகங்களிடமிருந்து பற்றுச்சீட்டுகள் அல்லது புள்ளிகளுடன் (credits) போக்குவரத்து, உணவுப் பற்றுச்சீட்டுகளையும் பெறலாம்.
எடுத்துக்காட்டாக, ‘ஹெல்தி 365’ செயலியில் 750 சுகாதாரப் புள்ளிகளுக்கு $5 ஃபேர்பிரைஸ் பற்றுச்சீட்டுகளைப் பெறலாம்.
ஃபேர்பிரைஸ் பேரங்காடிகள், அதன் இணைய விற்பனைத் தளம், யூனிட்டி கடைகள், ‘வேர்ஹவுஸ் கிளப்’, சியர்ஸ் பல்பொருள் அங்காடிகள் ஆகியவற்றில் வாடிக்கையாளர்கள் செலவழிக்கும்போது சேகரிக்கப்படும் ‘லிங்க்பாயிண்ட்ஸ்’ புள்ளிகளுக்கும் மேலாக சுகாதாரப் புள்ளிகள் கிடைக்கப் பெறுகின்றன.
ஆரோக்கியமான உணவு வகைகளைத் தெரிவுசெய்யும் வாடிக்கையாளர்களுக்கு வெகுமதி அளிக்கும் தன் தொடர்ச்சியான கடப்பாட்டின் ஒரு பகுதியாக இந்த ஏற்பாடு அமைவதாக ஃபேர்பிரைஸ் குழுமம் கூறியது.
தொடர்புடைய செய்திகள்
பயனர்கள் மேல்விவரம் பெற https://go.fpg.sg/Healthy365 எனும் இணையப்பக்கத்திற்குச் செல்லலாம்.

