ஃபேர்பிரைஸ் புதிய விலைமுறைத் திட்டம் நாடளாவிய ரீதியில் அறிமுகம்

ஃபேர்பிரைஸ் புதிய விலைமுறைத் திட்டம் நாடளாவிய ரீதியில் அறிமுகம்

2 mins read
90e13dba-48f7-4818-bb86-8cc2e4e3fdd2
கடந்த செப்டம்பர் மாதம் முக்கியப் பேரங்காடிகளில் சோதிக்கப்பட்ட இத்திட்டம் அனைத்துக் கிளைகளிலும் நடப்புக்கு வந்துள்ளதாக ஃபேர்பிரைஸ் திங்கட்கிழமை (ஜூலை 13) தெரிவித்தது. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

சிங்கப்பூரின் ஃபேர்பிரைஸ் குழுமம், வாடிக்கையாளர்களுக்குக் கூடுதல் பலன் அளிக்கும் வகையில் தனது புதிய விலையிடல் இயங்குமுறைத் திட்டத்தை அதன் அனைத்துக் கடைகளுக்கும் விரிவுபடுத்தியுள்ளது.

கடந்த செப்டம்பர் மாதம் முக்கியப் பேரங்காடிகளில் சோதிக்கப்பட்ட இத்திட்டம், அனைத்துக் கிளைகளிலும் நடப்புக்கு வந்திருப்பதாக ஃபேர்பிரைஸ் திங்கட்கிழமை (ஜூலை 13) தெரிவித்தது.

எட்டு வாரங்கள் நடைபெற்ற சோதனைத் திட்டத்தின்கீழ், அரிசி, இறைச்சி, முட்டை, சமையல் எண்ணெய், பழங்கள், காய்கறிகள் போன்ற குறிப்பிட்ட சில மளிகைச் சாமான்களுக்குப் புதிய விலையிடல் முறை கடைப்பிடிக்கப்பட்டது.

வாடிக்கையாளர்கள் பொருள்களின் ஒரு கிலோகிராம் அல்லது ஒரு லிட்டருக்கான விலையைப் பார்க்க வகை செய்யப்பட்டது. வெவ்வேறு நிறுவனத் தயாரிப்புகளின் விலையை அவர்கள் ஒப்பிட்டுப் பார்க்க இது உதவியது.

முன்னதாக, 27 பிரிவுகளின்கீழ் உள்ள பொருள்களுக்குச் சோதிக்கப்பட்ட இந்த முறையை 40 பிரிவுகளுக்கு விரிவுபடுத்தவும் அனைத்துக் கடைகளிலும் இணைய விற்பனைக்கும் இதைப் பின்பற்றவும் திட்டமிடுவதாக ஃபேர்பிரைஸ் நிறுவனம் கூறியதாக சிஎன்ஏ ஊடகம் தெரிவித்தது.

புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ள பொருள்களில் கோதுமை மாவு, பால், ரொட்டி, அணையாடைகள், குளியல் பொருள்கள் போன்ற, அன்றாடம் பயன்படுத்தும் பொருள்களும் அடங்கும்.

முன்னதாக, இந்தப் புதிய விலையிடல் இயங்குமுறைத் திட்டம் இவ்வாண்டுப் பிற்பகுதியில் விரிவுபடுத்தப்படும் என்று வர்த்தக, தொழில் அமைச்சர் கான் கிம் யோங் கூறியிருந்தார். இயோ சூ காங் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் யிப் ஹொங் வெங்கின் கேள்விக்கு அளித்த எழுத்துபூர்வமான பதிலில் அமைச்சர் அவ்வாறு குறிப்பிட்டிருந்தார்.

சிஎன்ஏ எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளித்த சிங்கப்பூர் போட்டித்தன்மை, பயனீட்டாளர் ஆணையம், புதிய விலையிடல் முறைக்கான முன்னோடித் திட்டத்திற்குக் கிடைத்த ஆதரவு ஊக்கமளிப்பதாக இருப்பதாகக் குறிப்பிட்டது. இந்த முன்னோடித் திட்டம் என்டியுசி ஃபேர்பிரைஸ், ஷெங் சியோங், பிரைம், கோல்ட் ஸ்டோரேஜ், ஜயண்ட் பேரங்காடிகளில் இடம்பெற்றது.

குறிப்புச் சொற்கள்