தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஃபைஷால் இப்ராஹிம் முஸ்லிம் விவகாரங்களுக்கு பொறுப்பு வகிக்கும் அமைச்சராகிறார்

2 mins read
909a836a-856f-407c-81db-096808f1b69a
முஸ்லிம் விவகாரங்களுக்குப் பொறுப்பு வகிக்கும் தற்காலிக அமைச்சராக இணைப் பேராசிரியர் முஹம்மது ஃபைஷால் இப்ராஹிம் பொறுப்பேற்கிறார். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

முஸ்லிம் விவகாரங்களுக்குப் பொறுப்பு வகிக்கும் தற்காலிக அமைச்சராக இணைப் பேராசிரியர் முஹம்மது ஃபைஷால் இப்ராஹிம் நியமிக்கப்பட்டுள்ளதாகப் பிரதமர் லாரன்ஸ் வோங் புதன்கிழமை (மே 21) அறிவித்தார்.

அப்பதவியை ஏழு ஆண்டுகள் வகித்து வந்த திரு மசகோஸ் ஸுல்கிஃப்லியிடம் இருந்து அந்தப் பொறுப்பை ஃபைஷால் இப்ராஹிம் ஏற்கிறார்.

சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சர் பதவியில் நீடிக்கும் திரு மசகோஸ், தமது பதவிக் காலத்தில் பல முயற்சிகளை முன்னெடுத்தார் என்றும் அவை மலாய்-முஸ்லிம் சமூகத்தால் மதிக்கப்பட்டு பாராட்டப்படுகின்றன என்றும் திரு வோங் கூறினார்.

“மலாய்-முஸ்லிம் தலைமைத்துவதைப் புதுப்பிப்பதற்கும், புதிய, இளைய தலைமுறையிடம் பொறுப்பைக் கொடுப்பதற்கும் இது தகுந்த நேரம்,” என்றார் அவர். இணைப் பேராசிரியர் ஃபைஷால் அந்தப் பொறுப்புக்குச் சிறந்த தேர்வு என்றார் பிரதமர்.

அடித்தள, சமூகத் தலைவராகவும் நாடாளுமன்ற உறுப்பினராகவும் அரசியல் பொறுப்பிலும் கிட்டத்தட்ட 30 ஆண்டுகளாக மலாய்-முஸ்லிம் சமூகப் பணிகளில் தாம் ஈடுபட்டு வருவதைச் சுட்டி கருத்துரைத்த அமைச்சர் ஃபைஷால், கல்வி, சமுதாய, குடும்ப மேம்பாடு, வீடமைப்பு, குற்றவாளிகளின் மறுவாழ்வு எனப் பல அம்சங்களில் பங்காற்றியுள்ளதாகவும் கூறினார்.

சமூகத்துடன் விரிந்தும் ஆழமாகவும் இணைந்து பணியாற்றியதன் பலனை அவர் அறிந்துள்ளதாகவும் சிறு சிறு வெற்றிகளே பெரிய சாதனைகளுக்கு வித்திடும் என்றும் கூறினார். குடியிருப்பாளர்களுடன் இணைந்து சேவையாற்றுவதால் பிறருக்கு ஆதரவு வழங்குவதில் உள்ள சவால்களை மக்கள் அறிந்து அவர்கள் மேலும் ஈடுபாட்டுடன் சேவையாற்றுகின்றனர் என்று திரு ஃபைஷால் கூறினார். சமூகமாக இணைந்து செயல்படுவதற்கு அவர் கடப்பாடு கொண்டார்.

அவருக்கு உதவியாக மெண்டாக்கி சுய உதவிக் குழுவின் தலைவராகப் பொறுப்பேற்கும் மூத்த துணை அமைச்சர் ஸாக்கி முகமது இருப்பார்.

“இருவரும் மலாய்/முஸ்லிம் அரசாங்க அதிகாரிகள், நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் இணைந்து மலாய்-முஸ்லிம் சமூகத்தைத் தொடர்ந்து ஈடுபடுத்தி, சிங்கப்பூரின் வலுவான அடித்தளங்களைக் கட்டியெழுப்புவதுடன், நாட்டின் இலக்குகளை அடைய சமூகத்துடன் இணைந்து பணியாற்றுவார்கள், “என்று பிரதமர் வோங் கூறினார்.

“நானும் அச்சமூகத்துடன் அணுக்கமாகப் பணியாற்றுவேன்,” என்றார் திரு வோங்.

குறிப்புச் சொற்கள்