திருத்தந்தை லியோ புதிய போப்பாண்டவராகத் தேர்வு செய்யப்பட்டதற்குச் சிங்கப்பூர் அதிபர் தர்மன் சண்முகரத்னமும் பிரதமர் லாரன்ஸ் வோங்கும் தங்களின் மனமார்ந்த வாழ்த்துகளைக் கூறியுள்ளனர்.
அதிபர் தர்மன் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், “ஆரம்ப நாள்களிலிருந்து கல்வி, சுகாதாரம், சமூகச் சேவைகளை வழங்குவதில் கத்தோலிக்கத் திருச்சபை கொண்டிருந்த பங்கைக் குறிப்பிட்டு, சிங்கப்பூரின் வளர்ச்சிக்குக் கத்தோலிக்கத் திருச்சபை நல்கியுள்ள பங்களிப்புகளை நாடு மதிக்கிறது,’’ என்று கூறியுள்ளார்.
திருச்சபையின் இந்த முயற்சிகள் சிங்கப்பூரில் உள்ள அனைத்துப் பின்னணியைக் கொண்ட மக்களுக்கும் பயனளிக்கும் வகையில் கருணையுடன் உள்ளார்ந்த பண்பாட்டை மேம்படுத்த உதவியுள்ளன என்றும் திரு தர்மன் புகழாரம் சூட்டியுள்ளார்.
பிரதமர் லாரன்ஸ் வோங் அனுப்பியுள்ள வாழ்த்து மடலில், அமைதியைப் பேணுவதிலும் சமயங்களுக்கு இடையேயான புரிதலை மேம்படுத்துவதிலும் திருச்சபைக்கும் குடியரசுக்கும் இடையே நிலவும் நீண்டகால நல்லுறவை மேற்கோள் காட்டி புதிய போப்பின் பணி வெற்றியடைய வாழ்த்து கூறினார்.
கத்தோலிக்கத் தேவாலயங்கள் சிங்கப்பூரின் எளியோருக்கும் வசதி குறைந்தோருக்கும் சிறப்பான வகையில் சேவையாற்றியதாகக் குறிப்பிட்ட திரு வோங், எதிர்வரும் காலங்களிலும் சிங்கப்பூருக்கும் கத்தோலிக்கத் திருச்சபைக்கும் இடையிலான உறவுகள் தொடர்ந்து வலுப்பெறுவதை எதிர்நோக்குவதாகவும் தெரிவித்துள்ளார்.