போலி கண் சொட்டு மருந்து விளம்பரம்: சிங்கப்பூர்ப் பொது மருத்துவமனை எச்சரிக்கை

போலி கண் சொட்டு மருந்து விளம்பரம்: சிங்கப்பூர்ப் பொது மருத்துவமனை எச்சரிக்கை

படம்: சிங்கப்பூர்ப் பொது மருத்துவமனை

13 Nov 2026 - 9:54 am

1 mins read

கண் சொட்டு மருந்து ஒன்றைச் சிங்கப்பூர்ப் பொது மருத்துவமனை உருவாக்கியதாகக் கூறும் விளம்பரத்தை ‘யூடியூப்’ தளத்தில் நீங்கள் பார்த்தால், கவனமாக இருங்கள். அது மோசடியாக இருக்கக்கூடும் எனப் பொதுமக்களைச் சிங்கப்பூர்ப் பொது மருத்துவமனை எச்சரித்துள்ளது.

வியாழக்கிழமை (நவம்பர் 12) இரவு 9 மணியளவில் வெளியான தமது ஃபேஸ்புக் பதிவில், அந்த விளம்பரத்திற்குத் தாம் அனுமதி அளிக்கவில்லை என்றும் அதனை ஆதரிக்கவில்லை என்றும் மருத்துவமனி தெளிவுபடுத்தியது.

மேலும், விளம்பரத்தில் முன்வைக்கப்பட்டுள்ள கருத்துகளைத் தாம் சரிபார்த்து உறுதிப்படுத்தவில்லை என்றும் அது கூறியது.

சந்தேகத்திற்குரிய இணைய இணைப்புகளைச் சொடுக்காமல் இருப்பதன் மூலமும் தனிப்பட்ட அல்லது நிதி சார்ந்த தகவல்களை வழங்காமல் இருப்பதன் மூலமும் சாத்தியமான மோசடிகளிலிருந்து பொதுமக்கள் தங்களைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என மருத்துவமனை கேட்டுக்கொண்டது.

மருத்துவமனை அல்லது அதன் ஊழியர்களால் ஆதரிக்கப்படுவதாகக் கூறப்படும் மிகைப்படுத்தப்பட்ட சுகாதாரக் கருத்துகள் அல்லது தயாரிப்புகள் குறித்துப் பொதுமக்கள் எப்போதும் விழிப்புடன் இருக்க வேண்டும். மேலும், தகவல்களை மருத்துவமனையின் அதிகாரபூர்வ இணையத்தளம், சமூக ஊடகத் தளங்கள் வழியாகச் சரிபார்த்து உறுதிப்படுத்த வேண்டும்.

சுகாதாரச் சேவைகள் தொடர்பான சட்டத்தின் விதிமுறைகளுக்கு இணங்க, எந்தவொரு குறிப்பிட்ட வணிகக் குறியீட்டையோ தயாரிப்பையோ தாம் ஊக்குவிக்கவோ, விளம்பரப்படுத்தவோ அல்லது ஆதரிக்கவோ இல்லை என்றும் அந்தப் பதிவில் தெரிவிக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்