போலியான ஜோகூர்-சிங்கப்பூர் வீட்டு மானியத் திட்டத்தால் $1 மில்லியன் இழப்பு

1 mins read
11cca565-c341-400d-911d-470eede3856c
செப்டம்பர் மாதத்திலிருந்து வீட்டு மானியத் திட்ட மோசடி தொடர்பில் கிட்டத்தட்ட 21 புகார்கள் அளிக்கப்பட்டுள்ளன. - படம்: சிங்கப்பூர்க் காவல்துறை

‘ஜோகூர்-சிங்கப்பூர் வீட்டு மானிய’ மோசடி மூலம் கடந்த செப்டம்பர் மாதத்திலிருந்து ஒரு மில்லியன் வெள்ளிக்கும் அதிகமான இழப்பு ஏற்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது.

இதன் தொடர்பில் ஏறத்தாழ 21 புகார்கள் பதிவாகியுள்ளன. சிங்கப்பூர்க் காவல்துறை, வெள்ளிக்கிழமை (நவம்பர் 14) வெளியிட்ட அறிக்கையில் இத்தகவல்கள் இடம்பெற்றுள்ளன.

சிங்கப்பூர்-ஜோகூர் அரசாங்கங்கள் இணைந்து வீட்டு மானியம் வழங்குவதாக ஃபேஸ்புக், வாட்ஸ்அப் போன்ற தளங்களில் போலியான விளம்பரங்கள் வெளியானதாக அது கூறியது. அத்தகைய வீட்டு மானியத் திட்டம் எதுவும் இல்லை என்று காவல்துறை தெரிவித்தது. போலி விளம்பரங்கள் சிலவற்றில் இரு நாட்டுப் பிரதமர்களும் கையெழுத்திட்டிருப்பது போன்ற போலியான ஆவணங்களும் இடம்பெற்றுள்ளன.

அவற்றின் மூலம் விண்ணப்பிக்கும்போது மோசடிக்காரர்கள் பாதிக்கப்பட்டோரின் தனிப்பட்ட விவரங்களைப் பெற்றுக்கொள்வர். பின்னர் சட்ட நடைமுறைக் கட்டணம் செலுத்தும்படி கேட்பர் என்று காவல்துறை குறிப்பிட்டது.

தனிப்பட்ட விவரங்களையோ பணத்தையோ விலையுயர்ந்த பொருள்களையோ அடையாளம் தெரியாதோரிடம் கொடுக்க வேண்டாம் என்று பொதுமக்களை அது கேட்டுக்கொண்டது.

குறிப்புச் சொற்கள்