வாக்காளர் பதிவேட்டில் தங்கள் பெயர்களைச் சேர்க்கச் சொல்லி அதிகாரத்துவ அறிவிப்புகள் போன்று வரும் போலிக் குறுஞ்செய்திகள் குறித்து விழிப்புடன் இருக்கும்படி சிங்கப்பூரர்களுக்குத் தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
தேர்தல் துறை வெளியிட்டுள்ளது போன்றதொரு அறிவிப்பு இணையத்திலும் குறுஞ்செய்திக் குழுக்களிலும் பகிரப்பட்டு வருகிறது.
அதனைத் தொடர்ந்து, www.eld.gov.sg என்ற அதிகாரத்துவ இணையத்தளத்தில் உள்ள வாக்காளர் சேவைப் பக்கத்திலோ அல்லது சிங்பாஸ் செயலி வழியாகவோ தங்களது வாக்களிப்புத் தகுதி குறித்து சிங்கப்பூரர்கள் சரிபார்த்துக்கொள்ளும்படி தேர்தல் துறை ‘டெலிகிராம்’ வழியாகக் கேட்டுக்கொண்டுள்ளது.
முன்னதாக, குறுஞ்செய்தி சமூக ஊடகத் தளங்களில் பகிரப்பட்டுவரும் மோசடி எச்சரிக்கை குறித்துத் தான் அறிந்துள்ளதாக பிப்ரவரி 19ஆம் தேதி தனது ஃபேஸ்புக் பக்கம் வழியாகத் தெரிவித்த தேர்தல் துறை, அந்த எச்சரிக்கையைத் தான் விடுக்கவில்லை என்றும் தெளிவுபடுத்தியது.
இணையம் வாயிலாகத் தங்களது வாக்களிப்புத் தகுதியைச் சரிபார்க்க முடியாத சிங்கப்பூரர்கள், தேர்தல் துறையின் 1800-225-5353 என்ற நேரடி அழைப்பு எண் வாயிலாக அதனை உறுதிப்படுத்திக் கொள்ளலாம் அல்லது அருகிலுள்ள சமூக நிலையங்கள் மற்றும் சர்விஸ்எஸ்ஜி நிலையங்களுக்கு நேரில் சென்று உதவிகோரலாம்.
தான் அனுப்பும் மின்னஞ்சல்கள் எப்போதுமே @eld.gov.sg என முடியும் என்பதைத் தேர்தல் துறை மீண்டும் நினைவூட்டியுள்ளது.
மேலும், சிங்கப்பூர் அரசாங்கம் அனுப்பும் குறுஞ்செய்திகள் gov.sg என்ற அனுப்புநர் முகவரியிலிருந்தே வரும்.
சிங்கப்பூரில் இதற்குமுன் இல்லாத வகையில், கடந்த 2024ஆம் ஆண்டில் மட்டும் மோசடிகள் மூலமாக $1.1 பில்லியன் இழப்பு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.