அமெரிக்காவைச் சேர்ந்த முன்னாள் அரசு ஊழியர் ஒருவர் ‘இன்ஃபோஎசா’ (Infoassa) எனும் ஆய்வு நிறுவனத்தில் வேலைக்கு விண்ணப்பித்திருந்தார்.
அது, அரசியல் கொள்கைகள் தொடர்பான விவகாரங்களைக் கையாள்வதாக நம்பப்பட்டது.
ஆனால், சில வாரங்களுக்குப் பிறகு அதுகுறித்து மரியா (உண்மையான பெயர் அல்ல) என்ற அவருக்கு ஐயங்கள் எழுந்தன. அந்நிறுவனம் தனக்குக் கொடுத்த எழுத்து வடிவிலான ‘தேர்வு’ போன்றவற்றால் மரியாவுக்குச் சந்தேகம் எழுந்தது.
‘இன்ஃபோஎசா’ பற்றி இணையத்தில் அவரால் அதிக தகவல்களை ஈட்ட முடியவில்லை. ஆய்வு நிறுவனத் துறையில் பணியாற்றும் அவரின் நண்பர்களும் அந்நிறுவனத்தைப் பற்றி அதிகம் கேள்விப்படவில்லை.
பழைய சம்பவம்
பிறகு, அமெரிக்காவைச் சேர்ந்த பட்டதாரி ஒருவர் வேவு நடவடிக்கையில் சிக்கிய சம்பவம் குறித்து மரியா நினைவுகூந்தார். தானும் அதைப்போல் வெளிநாட்டு உளவுத்துறை அமைப்பால் வேலைக்கு எடுக்கப்படும் முயற்சி மேற்கொள்ளப்பட்டுவரக்கூடும் என்று அவருக்கு உதித்தது.
சிஎன்ஏ ஊடகம் நடத்திய விசாரணையில் ‘இன்ஃபோஎசா’ தொடர்பில் சந்தேகத்துக்குரிய பல அம்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அதன் ஊழியர்களில் ஒருவருக்காவது போலியான வேலைப் பின்னணி இருப்பது, போலி ஃபேஸ்புக் நிகழ்ச்சிகள் போன்றவை கண்டுபிடிக்கப்பட்டன. அந்நிகழ்சசிகளுக்கான விவரங்கள் மற்ற அமைப்புகளின் கட்டுரைகளிலிருந்து எடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ‘இன்ஃபோஎசா’ இணையத்தளத்தின் கட்டமைப்பில் இடம்பெறும் பல அம்சங்கள் ‘தட்ரூத்இன்ஃபோ’ (TheTruthInfo) எனப்படும் இணையத்தளத்தின் அம்சங்களுடன் ஒத்துப்போயின. ‘தட்ரூத்இன்ஃபோ’ இணையத்தளத்தின் செயல்பாடு கடந்த ஜூன் மாதம் அமெரிக்க அதிகாரிகளால் நிறுத்தப்பட்டது.
அதே காலகட்டத்தில் வேறு 12 இணையத்தளங்களையும் அமெரிக்கா அகற்றியது. அவை, அரசாங்க ரகசியங்கள் உள்ளிட்ட தகவல்களைப் பெறக்கூடிய அதிகாரத்தில் இருக்கும் அமெரிக்கர்களைக் குறிவைக்கும் சீன உளவுத்துறை ஆள்சேர்ப்பு நடவடிக்கையில் அங்கம் வகித்ததாக அமெரிக்கா குற்றஞ்சாட்டியது. அக்குற்றச்சாட்டுகளைச் சீன அரசாங்கத்துக்குச் சொந்தமான குளோபல் டைம்ஸ் ஊடகம் விரைவில் மறுத்தது.
போலி ஆய்வு நிறுவனங்கள்
‘இன்ஃபோஎசா’ மற்ற போலி ஆய்வு நிறுவனங்களைப் போல் தென்பட்டது. அவற்றில் சிங்கப்பூரிலிருந்து இயங்குவதாகக் கூறப்பட்ட கிழக்காசிய உத்திபூர்வக் கல்விக் கழகமும் (ஐஇஏஎஸ்எஸ்) அடங்கும்.
அரசாங்க, ராணுவ, நாடாளுமன்ற அல்லது ஆய்வு நிறுவன அனுபவம் உள்ளவர்களை வேலைக்கு எடுக்கும் முயற்சியில் ‘இன்ஃபோஎசா’ ஈடுபட்டுவருகிறது. பீச் ரோட்டில் அதன் பதிவுசெய்யப்பட்ட முகவரிக்கு சிஎன்ஏ நேரில் சென்றபோது அதன் வர்த்தகச் சேவைகளுக்கான பதாகை மட்டுமே காணப்பட்டது.
கருத்து கேட்டு சிஎன்ஏ, ‘இன்ஃபோஎசா’வைத் தொடர்புகொண்டுள்ளது.


