தேடுபொறிகளைப் பயன்படுத்தி இணையத்தளங்களைப் பார்க்கும்போது அதன் முடிவுகளில் வரும் இணைய முகவரிகள் முறையானவையா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும் என்று காவல்துறை எச்சரித்துள்ளது.
சிம்பா தொலைத்தொடர்பு நிறுவனத்தின் போலி இணையத்தளங்களை உள்ளடக்கிய ‘ஃபிஷிங்’ எனும் மின்வழிப்பறி மோசடிகள் அதிகரித்துவரும் நிலையில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாண்டு மார்ச் மாதம் முதல் பதிவான 62 சம்பவங்களில் $83,000க்கும் மேல் இழப்பு ஏற்பட்டதாகக் காவல்துறை புதன்கிழமை (அக்டோபர் 21) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.
இந்த மோசடியில், பாதிக்கப்பட்டவர்கள் சிம்பா, கட்டண நிரப்பு சேவைகளுக்காக கூகலில் தேடியுள்ளனர். அப்போது தோன்றிய போலி சிம்பா இணையத்தளங்களைக் கண்டறிந்து அவற்றைச் சொடுக்கியுள்ளனர்.
அந்த மோசடி இணையத்தளங்களில் பாதிக்கப்பட்டவர்கள் தங்களது கைப்பேசி எண்கள், வங்கி அட்டை விவரங்கள் போன்ற தனிப்பட்ட மற்றும் வங்கித் தரவுகளைப் பதிவிட்டு, பரிவர்த்தனைகளை உறுதிப்படுத்துமாறு கோரப்பட்டுள்ளனர். தங்களின் அட்டைகளில் அங்கீகரிக்கப்படாத பரிவர்த்தனைகள் நடந்திருப்பதைக் கண்டறிந்த பிறகே, தாங்கள் ஏமாற்றப்பட்டதை பாதிக்கப்பட்டவர்கள் உணர்ந்ததாகக் காவல்துறை கூறியது.
தேடுபொறி முடிவுகளின் மேற்பகுதியிலோ விளம்பரங்களாகவோ தோன்றும் இணையத்தளங்கள், புகழ்பெற்ற சின்னங்களின் பெயர்களைப் போல் போலி வடிவம் கொண்ட மோசடி இணையதளங்களாக இருக்கலாம் என்று காவல்துறை எச்சரித்தது.
கட்டணம் நிரப்புவதற்குரிய சிம்பாவின் முறையான இணைய முகவரி https://topup.simba.sg என்பதாகும். மோசடி இணையத்தளங்கள் இதிலிருந்து வேறுபட்ட விரிவாக்கங்களைப் பயன்படுத்துவதால், இணைய முகவரிகளைக் கவனமாகச் சரிபார்க்குமாறு காவல்துறை பொதுமக்களுக்கு நினைவூட்டியது.
