திறன்பேசிகளில் போலிச் செயலிகளைப் பயன்படுத்தியோர் சுமார் $1.72 மில்லியனை இழந்ததாகக் காவல்துறை தெரிவித்துள்ளது. இவ்வாண்டு ஜனவரியிலிருந்து 32 மோசடிச் சம்பவங்கள் குறித்துப் புகார் கிடைத்ததாகக் காவல்துறை வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 1) கூறியது. ‘ஆப்பிள் ஆப் ஸ்டோர்’, ‘கூகல் ப்ளே ஸ்டோர்’ ஆகியவற்றில் அந்தப் போலிச் செயலிகள் இடம்பெற்றிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
ஃபேஸ்புக் போன்ற சமூக ஊடகங்கள் மூலமாகவும் லிங்க்ட்இன், டிண்டெர் போன்ற தொடர்பு, துணை தேடல் செயலிகள் வழியாகவும் இணைய ஊடுருவிகள் பாதிக்கப்பட்டோரை அணுகியதாகத் தெரியவந்தது. சமூக ஊடகத்தில் முதலீட்டு விளம்பரங்களின் மூலமாகவும் பாதிக்கப்பட்டோர் தொடர்புகொள்ளப்பட்டனர்.
அவர்களின் நம்பிக்கையைப் பெற்ற பிறகு, போலி முதலீடுகள் அல்லது வேலை வாய்ப்புகளை இணைய ஊடுருவிகள் அறிமுகம் செய்வர். பாதிக்கப்பட்டோர் போலித் திறன்பேசிச் செயலிகளைப் பதிவிறக்கி அவற்றில் கணக்குகளைத் தொடங்கும்படி கேட்டுக்கொள்ளப்படுவர்.
பின்னர் வர்த்தகத்தை நிறுவ, முதலீடு செய்யவோ பொருள்களை வாங்கவோ ஊடுருவிகளின் வங்கிக் கணக்குகளுக்குப் பணத்தை மாற்றிவிடுமாறு அவர்கள் கேட்டுக்கொள்ளப்படுவர்.
பரிவர்த்தனைகள், சிங்கப்பூர் வெள்ளியிலோ வெளிநாட்டு நாணயத்திலோ மின்னிலக்க நாணயத்திலோ இடம்பெற்றதாகக் காவல்துறை தெரிவித்தது.
பாதிக்கப்பட்டோரில் சிலருக்கு முதலில் லாபம் என்ற பெயரில் சிறிது தொகை கொடுக்கப்படும். போலி முதலீட்டில் கூடுதல் தொகையைப் போடுவதற்கு அது அவர்களை ஊக்குவிக்கும்.
போட்ட பணத்தைத் திரும்ப எடுக்க முடியாதபோது அல்லது ஊடுருவிகளைத் தொடர்புகொள்ள முடியாதபோது தாங்கள் ஏமாற்றப்பட்டதைப் பாதிக்கப்பட்டோர் உணர்ந்துகொண்டனர்.
முதலீட்டு முடிவுகளை எடுக்கும் முன்பு கவனத்துடன் இருக்குமாறு காவல்துறை மக்களுக்கு ஆலோசனை கூறுகிறது.
தொடர்புடைய செய்திகள்
தகவல்கள், தொலைபேசி எண்கள், இணையத்தளத் தொடர்புகள் போன்றவை சந்தேகப்படும்படி இருந்தால் ‘ஸ்கேம்ஷீல்ட்’ செயலியில் சரிபார்த்துக்கொள்ளலாம்.
உதவி தேவைப்படுவோர், 1799 எனும் அவசரத் தொலைபேசி எண்ணை அழைக்கலாம். இணையத்தளத்தையும் நாடலாம். இணைய முகவரி: www.scamshield.gov.sg