மூத்தோரைக் குறிவைத்து நடத்தப்படும் போலி பயணச் சலுகை மோசடி

மூத்தோரைக் குறிவைத்து நடத்தப்படும் போலி பயணச் சலுகை மோசடி

படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

06 Nov 2026 - 4:13 pm

1 mins read

வெளிநாட்டுச் சுற்றுலா செல்லத் திட்டமிடும் மூத்தோர், போலி விடுமுறைச் சலுகைகளை வழங்கும் மோசடிக்காரர்களிடம் விழிப்புடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். தங்களது அடையாளத்தைப் பயன்படுத்திப் போலிப் பதிவுகள் செய்யப்படுவதாக சிடிசி டிராவல் பயண நிறுவனம் எச்சரித்துள்ளது.

நவம்பர் 3ஆம் தேதி ஃபேஸ்புக்கில் அந்நிறுவனம் வெளியிட்ட பதிவில், குறைந்த விலையில் மூத்த குடிமக்களுக்கான தள்ளுபடி விலையிலான அனைத்து வசதிகளும் அடங்கிய 20 பயணத் தொகுப்புகளை வழங்குவதாகக் கூறி ஆள்மாறாட்ட மோசடிகள் நடப்பதாக அது தெரிவித்தது.

மேலும், சந்தேகத்திற்குரிய இணைய இணைப்புகளைச் சொடுக்கவோ, மோசடி குறுஞ்செய்திகளுக்குப் பதிலளிக்கவோ, தனிப்பட்ட விவரங்களை வெளியிடவோ வேண்டாமெனப் பொதுமக்களுக்கு அது அறிவுறுத்தியுள்ளது.

தங்களின் அதிகாரப்பூர்வத் தொடர்பு வழிகள் மூலமாகவே உண்மையான சலுகைகள் வெளியிடப்படும் என்றும் சந்தேகம் இருப்பின் நேரடியாகத் தங்களைத் தொடர்புகொள்ளுமாறும் பொதுமக்களை அது கேட்டுக்கொண்டுள்ளது.

சிங்கப்பூரில் 2019ஆம் ஆண்டு முதல் மோசடிகளால் பாதிக்கப்பட்டோர் $4 பில்லியனுக்கும் மேல் இழந்துள்ளனர்.

இவ்வாண்டு ஜனவரி முதல் குறைந்தது 148 பயணம் தொடர்பான மோசடிச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. புக்கிங்.காம் தளங்களைக் குறிவைத்து வாட்ஸ்அப் அல்லது மின்னஞ்சல் வழியாகப் பிரதிநிதிகள்போல் நடித்துக் கடன் அட்டை விவரங்களை ஏமாற்றிப் பெறும் போக்கு காணப்படுகிறது.

ஃபேஸ்புக் போன்ற சமூக ஊடகங்களில் கெண்டிங் டிரீம் உள்ளிட்ட போலி உல்லாசக் கப்பல் முன்பதிவுகள் தொடர்பாகவும் புகார்கள் பதிவாகியுள்ளன.

குறிப்புச் சொற்கள்