போலி தடுப்பூசி வழக்கு: மருத்துவரின் வாக்குமூலம் செல்லுபடியாகும்

2 mins read
cbbc9574-8c6a-49b4-9f85-c1417f5fed88
ஜிப்சன் குவா. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்
multi-img1 of 3

போலி கொவிட்-19 தடுப்பூசி தொடர்பான வழக்கில் சம்பந்தப்பட்டுள்ள ஜிப்சன் குவா, 37, என்ற மருத்துவர் காவல்துறையினரிடமிருந்து எவ்வித மிரட்டலும் இல்லாமல்தான் தனது வாக்குமூலங்களைத் தந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்காலிகப் பணிநீக்கம் செய்யப்பட்டிருக்கும் குவா அளித்த ஆறு வாக்குமூலங்கள் நீதிமன்றத்தில் அனுமதிக்கப்பட்டிருப்பது செல்லுபடியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள ஐரிஸ் கோ, சுவா செங் சூன் ஆகிய இருவரும் குற்றம் புரிந்ததாக குவா அந்த வாக்குமூலங்களில் கூறியிருந்தார்.

வாக்குமூலம் அளிக்குமாறு விசாரணை அதிகாரிகள் தன் மனதை மாற்றியதாக குவா குற்றஞ்சாட்டியிருந்தார். ஆனால், சம்பந்தப்பட்ட விசாரணை அதிகாரிகள் அவ்வாறு செய்யவில்லை என்று மாவட்ட நீதிபதி பால் குவான் குறிப்பிட்டுள்ளார்.

விசாரணை அதிகாரிகள் மனதை மாற்ற முயன்றதாக குவா தனக்குத் தானே நினைத்துக்கொண்டிருக்கலாம் என்று நீதிபதி குவான் திங்கட்கிழமை (ஜூலை 28) சொன்னார்.

வழக்கு விசாரணையின்கீழ் வாக்குமூலத்தை அனுமதிப்பது தொடர்பான மற்றொரு விசாரணையின் தீர்ப்பை நீதிபதி அளித்தார். குவாவின் வாக்குமூலங்கள் நீதிமன்றத்தில் செல்லுபடியாகுமா என்பதை நிர்ணயிக்க வழக்கு விசாரணையினுள் மற்றொரு விசாரணை நடத்தப்பட்டது.

குவா, அவரின் முன்னாள் மருந்தக உதவியாளர் சுவா, 43, தடுப்பூசி எதிர்ப்புக் குழுவான ‘ஹீலில் தி டிவைட்’டை நிறுவிய கோ, 49, ஆகியோர் சம்பந்தப்பட்ட வழக்கின் நீதிமன்ற விசாரணையின்போது இந்த விவகாரம் தலைதூக்கியது. நோயாளிகள் கொவிட்-19 தடுப்பூசி பெறாதபோதும் அதைப் பெற்றதாக சுகாதார மேம்பாட்டு வாரியத்திடம் பொய்த் தகவல் அளிக்க மூவரும் கூட்டு சதியில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.

காவல்துறையிடம் தான் அளித்த 11 வாக்குமூலங்களில் ஆறை ஏற்றுக்கொள்ள முடியாது என்று வழக்குக்கான நீதிமன்ற விசாரணையின்போது குவாவின் தரப்பு வாதிட்டது. அந்த வாக்குமூலங்களை அதிகாரிகள், குவாவை மிரட்டி, மனதை மாற்றி அல்லது கைமாறு தருமாறு உறுதியளித்துப் பெற்றனர் என்று குவா தரப்பு குற்றஞ்சாட்டியது.

அந்த வாக்குமூலங்கள் 2022ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 22லிருந்து 29ஆம் தேதிக்கு இடைப்பட்ட காலத்தில் அளிக்கப்பட்டன.

குறிப்புச் சொற்கள்