பொய்யுரைத்த வழக்கில் பிரித்தம் சிங் சாட்சியம்

2 mins read
dfa11de3-c9a7-43e6-9ded-9c54dce49755
அரசு நீதிமன்றத்திற்கு செவ்வாய்க்கிழமை (நவம்பர் 5) தற்காப்புத் தரப்பு வழக்கறிஞருடன் வந்துள்ளார் பிரித்தம் சிங். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

பாட்டாளிக் கட்சித் தலைமைச் செயலாளர் பிரித்தம் சிங் மீது சுமத்தப்பட்டுள்ள இரண்டு குற்றச்சாட்டுகளை நிரூபிக்க, அரசு தரப்பு முன்வைத்த வாதத்தில் போதிய ஆதாரங்கள் இல்லை எனத் தற்காப்புத் தரப்பு தெரிவித்துள்ளது. 

அந்த இரண்டு குற்றச்சாட்டுகளும், திரு சிங்கை விசாரித்த நாடாளுமன்ற சிறப்புரிமைக் குழுவின் கேள்விகளை விவரிக்கவோ, அவற்றுக்கு திரு சிங்கின் பதில் பொய் எனக் குற்றஞ்சாட்டவோ இல்லை என்று தற்காப்பு வழக்கறிஞர் ஆன்ட்ரே ஜுமபோய் கூறினார்.

முன்னதாக, அந்த இரு குற்றச்சாட்டுகளில் ஒன்றுக்குத்தான் ஆதாரம் இல்லை என தற்காப்புத் தரப்பு கூறியிருந்தது.

பாட்டாளிக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரயீசா கானின் பொய்யுரை தொடர்பில் திரு சிங் எதிர்நோக்கும் நீதிமன்ற வழக்கு விசாரணையின் 10வது நாளான செவ்வாய்க்கிழமை (நவம்பர் 5) இவ்வாறு நீதிமன்றத்தில் கூறப்பட்டது.

அரசு தரப்பின் எழுத்துபூர்வ சமரப்பிப்புகளுக்குப் பதிலளித்த திரு ஜுமபோய், திருவாட்டி கானின் பொய்யுரையைக் கல்லறைக்கு எடுத்துச் செல்லும்படி தம் கட்சிக்காரர் சொல்லவில்லை என்று மீண்டும் வலியுறுத்தினார்.

திரு சிங் பொய்யுரைத்ததாக அரசு தரப்பினர் கூறினால், “சிறப்புரிமைக் குழுவில் உங்களிடம் கேட்கப்பட்ட கேள்வி இதுதான், எங்களுக்குக் கொடுக்கப்பட்ட பொய்யான பதில் இதுதான்,” என அவர்கள் கூறியிருக்கவேண்டும் என வாதிட்டார்.

திரு சிங் கூறாத, ஒன்றோடு ஒன்று பொருந்தாத, தனித்தனி வாக்கியங்களை அரசு தரப்பு நம்பியிருக்கக்கூடாது என்றும் திரு ஜுமபோய் கூறினார்.

வழக்கிற்குத் திருவாட்டி கான் நம்பகத்தன்மையான சாட்சி இல்லை என்ற முடிவுசெய்யக் கோரும் விண்ணப்பத்தை அக்டோபர் 15ஆம் தேதி திரு ஜுமபோய் தாக்கல் செய்தார்.

திருவாட்டி கான், நீதிமன்றத்தில் அளித்த ஆதாரமும் காவல்துறையிடம் அளித்த வாக்குமூலமும் முன்னுக்குப் பின் முரணாக இருப்பதாகத் திரு ஜுமபோய் அப்போது கூறியிருந்தார்.

தற்காப்புத் தரப்பின் விண்ணப்பம் குறித்து நீதிபதி இதுவரை முடிவெடுக்கவில்லை.

குறிப்புச் சொற்கள்