சிங்கப்பூரில் சென்ற ஆண்டு (2023), அதற்கு முந்தைய ஐந்து ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில், சராசரியான குடும்பங்களின் வருவாயும் செலவும் கூடியதாகத் தெரியவந்துள்ளது.
இருப்பினும் அவற்றின் வருவாய், செலவைவிட அதிகமான வேகத்தில் வளர்ச்சி கண்டுள்ளது.
2017 அல்லது 2018ஆம் ஆண்டில் குடும்பங்களின் சராசரி மாத வருமானம் $12,661ஆக இருந்தது. ஒப்புநோக்க சென்ற ஆண்டு அது $15,473ஆகப் பதிவானது. இது, ஆண்டுக்கு 4.1 விழுக்காடு அதிகமாகும்.
இவ்வேளையில், அதே காலகட்டத்தில் சிங்கப்பூர்க் குடும்பங்களின் சராசரி மாதச் செலவு 2.8 விழுக்காடு அதிகரித்து $5,163லிருந்து $5,931 ஆனது.
குடும்பங்களின் செலவின ஆய்வு 2023ல் அந்த விவரங்கள் தெரியவந்தன.
அரசாங்கம் ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தும் அந்தக் கருத்தாய்வின் முடிவுகள் நவம்பர் 28ஆம் தேதி வெளியிடப்பட்டன.
கருத்தாய்வில் 2022ஆம் ஆண்டு நவம்பர் முதல் 2023 நவம்பர் வரை, குடும்பங்கள் கருத்துரைத்தன.
கருத்தாய்வில், வேலை, முதலீடு, வாடகை வருமானம், அரசாங்கம் வழங்கும் தொகை, குடும்பத்தைச் சாராதோரின் பங்களிப்பு போன்றவற்றைக் குடும்ப வருமானமாகக் கருதுவது வழக்கம். இம்முறை மத்திய சேம நிதிக் கணக்கில் உள்ள தொகைக்கான வட்டியும் கருத்தில் கொள்ளப்பட்டது.
தொடர்புடைய செய்திகள்
இருப்பினும், சொத்து விற்பனை, மத்திய சேம நிதியிலிருந்து பெருந்தொகையை எடுப்பது போன்ற நடவடிக்கைகள் மூலம் கிடைத்த தொகை, கணக்கில் எடுத்துக்கொள்ளப்படவில்லை.
தள்ளுபடி, மானியம் உட்பட அரசாங்கம் வழங்கிய தொகையால் குடும்பங்களின் வருவாய் கூடியதாகவும் அதிகரிக்கும் செலவினத்தைச் சமாளிக்க, சராசரிக் குடும்பங்களுக்கு இது உதவியதாகவும் கூறப்பட்டது.

